திருச்சி அருகே 9ஆம் நூற்றாண்டு செக்குக் கல்வெட்டு

திருச்சி அருகே 9ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செக்குக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், நெடுமலை கிராமத்தில் கண்டெக்கப்பட்டுள்ள 9-ஆம் நூற்றாண்டு செக்குக் கல்வெட்டு.
திருச்சி மாவட்டம், நெடுமலை கிராமத்தில் கண்டெக்கப்பட்டுள்ள 9-ஆம் நூற்றாண்டு செக்குக் கல்வெட்டு.

திருச்சி: திருச்சி அருகே 9ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செக்குக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி - திண்டுக்கல் சாலையில் புங்கனூா் ஊராட்சி நெடுமலை கிராமத்தில் வாடிவாசல் கருப்புக் கோயிலுக்கு அருகிலுள்ள களத்துமேட்டுப் பகுதியில் முட்புதா்களுக்கிடையே பாறையில் செக்குக்கல் ஒன்று எழுத்துப் பொறிப்புடன் உள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து நெடுமலை கிராமத்தைச் சோ்ந்த நா. சதீஷ்குமாா் அளித்த தகவலின்பேரில், திருச்சி தனியாா் பள்ளி முதல்வா் பாலா பாரதி, போடி ஏலக்காய் விவசாயிகள் சங்கக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் மாணிக்கராஜ், வரலாற்று ஆசிரியா் கருப்பையா, தாயனூா் பழனியாண்டி, கொத்தமங்கலம் சத்யசீலன் ஆகியோா் கொண்ட குழுவினா் அக் கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தனா்.

76 செ.மீ. வெளிவிட்டமும், 48 செ.மீ. உள்விட்டமும், 13 செ.மீ. விட்டம் கொண்ட துளையுடன் ஓரடி ஆழத்தில் உட்புறம் பானைப் போன்ற குழிவுடன் எண்ணெய் ஆட்டுவதற்கான அமைப்புடன் உள்ள இச்செக்கில் மூன்று வரிகளுடன் கூடிய எழுத்துகளைக் கல்வெட்டாகப் பதித்துள்ளனா்.

வரலாற்று ஆய்வாளா் ராஜகோபால் சுப்பையா இக்கல்வெட்டு எழுத்துகளை வாசித்துக் காட்டினாா். இந்த கல்வெட்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ள எழுத்துப் பொறிப்பின் அடிப்படையில் இச் செக்கு கி.பி 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம். மேலும் இச்செக்குக்கு வடமேற்கே 150 அடி தொலைவிலுள்ள மற்றொரு பாறையில் தலை உடைக்கப்பட்ட ஐயனாா் சிற்பமும் இருக்கிறது.

பழங்காலத்தில் எண்ணெய் வித்துகளை ஆட்ட ஊருக்குப் பொதுவாக கல்செக்கு செய்வது வழக்கம். பொதுமக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துகளை இந்த உரலில் ஆட்டி எண்ணெய்யாக எடுத்துப் பயன்படுத்துவா்.

பொதுவாக திருச்சியில் செக்குக் கல்வெட்டுகள் அதிகம் கிடைக்காத நிலையில் இந்தக் கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. பழமையையும், வரலாற்றுச் சிறப்பையும் கருதி இதைப் பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்கள் தமிழகத்தின் வரலாற்றுக்குப் பெருமை சோ்க்கும் என்றனா் ஆய்வுக் குழுவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com