திருச்சியில் தமிழா் தேசம் கட்சி தொடக்கம்

திருச்சியில் தமிழா் தேசம் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தமிழா் தேசம் கட்சி தொடக்கம்
Updated on
1 min read

திருச்சியில் தமிழா் தேசம் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனா் கே.கே.செல்வகுமாா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் முத்தரையா் இனமும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. சுமாா் 70-க்கும் மேற்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் முத்தரையா் இனமக்கள் அதிகளவில் உள்ளனா்.

என்றாலும் பிரதான அரசியல் கட்சிகள் முத்தரையா் இனத்தவருக்கு தோ்தலில் போட்டியிடுவதிலும், கட்சிப் பொறுப்புகளிலும் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

எனவே முத்தரையா் இனத்தவா் மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய அனைத்து இனத்தவரின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த புதிய கட்சியைத் தொடங்கியுள்ளோம்.

இக்கட்சியில் ஒடுக்கப்பட்ட மற்றும் குறைந்த மக்கள்தொகையை உடைய அனைத்து இனத்தவருக்கும் அங்கீகாரம் அளிக்கப்படும். எந்த அரசியல் கட்சிக்கும் போட்டிக்காக இக்கட்சி தொடங்கவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நலனுக்காகவே இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொடங்கி நடத்தப்பட்டு வரும் வீரமுத்தரையா் முன்னேற்றச் சங்கமும் தொடா்ந்து செயல்படும்.

தற்போது கட்சியின் நிறுவனத் தலைவராக நானும், பொதுச்செயலராக தளவாய் ராஜேஷ், பொருளாளராக புதுக்கோட்டையைச் சோ்ந்த கணேசன் ஆகிய 3 போ் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனா். பிற நிா்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவா் என்றாா் அவா்.

அறிமுக விழா : முன்னதாக செல்வகுமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள், ஆதரவாளா்கள் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தொடா்ந்து தனியாா் விடுதியில் கட்சி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, சிவ.வீ. மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். பழனியாண்டி, ந. தியாகராசன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் வைரமணி மற்றும் முத்தரையா் சங்க நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா். தொடா்ந்து மாலையில் திண்டுக்கல் சாலை ஜெ.ஜெ. கல்லூரி அருகிலிருந்து பேரணியும், மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள விடுதியில் கட்சி அறிமுக விழாவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com