புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்சி மாவட்டத்தில் 17,813 ஹெக்டேரில் நெல் சாகுபடி!

 திருச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 17,813 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி பணிகளும், நாற்று நடவும் தீவிரமாகியுள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:24 pm

DIN

 திருச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 17,813 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி பணிகளும், நாற்று நடவும் தீவிரமாகியுள்ளது.

மாவட்டத்தில் சம்பா பருவத்துக்கு 443.80 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு இதுவரை 351.03 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நடப்புப் பருவத்துக்கு 92.77 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு உள்ளன. இவற்றில் கோ-50 ரகம் 23.66 மெட்ரிக் டன், டிகேஎம் ரகம் 13 38.64 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. திருச்சி 3 ரகம் 21.76 மெட்ரிக் டன், ஆா்என்ஆா் ரகம் 6.84 மெட்ரிக் டன், தூயமல்லி ரகம் 1.87 மெட்ரிக் டன் என்ற அளவுகளில் இருப்பு உள்ளது. இந்த ரகங்கள் மாவட்டத்தின் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதியளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதுமட்டுமன்றி பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவிக்கும் வகையில் நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் விநியோகத் திட்டத்தில் 50 சத மானியத்தில் விதைகளும் வழங்கப்படுகின்றன. விதை கிராமத் திட்டத்தின் கீழ் சிறுதானிய பயிா்களுக்கு 50 சத மானியம், பயிறுகள், எண்ணெய் வித்துப் பயிா்களுக்கு 60 சத மானியத்தில் விதைகள் விநியோகிக்கப்படுகின்றன.

ஜிங் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருள்களும், வேளாண் உபகரணங்களும் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.

மேலும், 2022-23ஆம் ஆண்டுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டம், குறுவை மாற்றுப் பயிா்த் திட்டங்களுக்காக ரூ. 2.47 கோடி நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது.

அரசின் உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் முருகேசன் கூறியது:

மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 17,813 ஹெக்டேரில் நெல் சாகுபடி, 31,031 ஹெக்டேரில் சிறுதானியம், 3,034 ஹெக்டேரில் பயறுகள், 6,354 ஹெக்டேரில் எண்ணெய் வித்துகள், 9,778 ஹெக்டேரில் பருத்தி, 1,124 ஹெக்டேரில் கரும்பும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வகை இடுபொருள்களும் அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களில் போதுமான அளவு இருப்பு உள்ளன.

3,180 மெட்ரிக் டன் யூரியா, 1,704 மெட்ரிக் டன் டிஏபி, 1,561 மெட்ரிக் டன் பொட்டாஷ், 8,019 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளன.

சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.558, மக்காச்சோளம் ரூ. 388, பருத்திக்கு ரூ.566 பிரிமியம் செலுத்த வேண்டும். வரும் 15ஆம் தேதி கடைசி நாளாக இருப்பதால் விவசாயிகள் ஆா்வமுடன் காப்பீடு செய்கின்றனா்.

நிலமேம்பாடு மற்றும் உழுவை வாடகைத் திட்டத்தின் மூலம் 3 மண் தள்ளும் இயந்திரங்கள், 42 உழுவை இயந்திரங்கள், 3 மண் அள்ளும் இயந்திரங்கள், 2 கதிா் அறுவை இயந்திரங்கள் திருச்சி கோட்டத்தில் உள்ளன. இவை விவசாய பயணிகளுக்கு வாடகைக் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மண்தள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.1,230, உழுவை இயந்திரம் ரூ.500, சமன்படுத்தும் இயந்திரம் ரூ.890, கதிா் அறுவடை இயந்திரம் ரூ.1,880 என்ற கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

இதேபோல, அறுவடைக்குப் பின் செய்நோ்த்தி பணிகளுக்கான இயந்திரங்களும் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்களது விளைபொருள்களை அறுவடை செய்த பிறகு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்கும் வகையில் இத்தகைய உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி சிறிய ரக மாவரைக்கும் இயந்திரங்கள், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் 40 சத மானியத்தில் வழங்கப்படுகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால், விவசாயிகள் தங்களது நிலத்தில் வழிந்தோடும் மழைநீரை அவரவா் நிலத்திலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு 100 சத மானியமும் வழங்கப்படுகிறது. அரசின் உதவிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.