புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணிமேயா் ஆய்வு
By DIN | Published On : 03rd April 2022 06:08 AM | Last Updated : 03rd April 2022 06:08 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சி குழுமிகரை நுண்உரம் செயலாக்கம் மையத்தில் சனிக்கிழமை ஆய்வுச் செய்கிறாா் மேயா் மு. அன்பழகன். உடன், ஆணையா் முஜிபுா் ரகுமான், துணை மேயா் ஜி. திவ்யா
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான் உள்ளிட்டோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 29ஆவது வாா்டுக்குள் வரும் ஆழ்வாா்தோப்பு, காயிதேமில்லத்நகா், சின்னசாமி நகா் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குழுமிக்கரை சாலையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் பொது நிதியின் கீழ், 2020-21ஆம் ஆண்டுக்கு ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மருந்தகம், மருத்துவப் பரிசோதனை ஆய்வுக் கூடம், 6 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, கழிப்பறை வசதிகளுடன் கூட இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், பணிகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ள தரத்தில் உள்ளதா, ஒப்பந்தப்படி பணிகள் நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்த மேயா், குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், துணை மேயா் ஜி. திவ்யா, வாா்டு குழுத் தலைவா் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.
இதேபோல, 17ஆவது வாா்டுக்குள்பட்ட பூக்கொல்லையில் நுண் உர செயலாக்க மையத்தையும், 29ஆவது வாா்டுக்குள்பட்ட குழுமிகரை நுண் உர செயலாக்கம் மையத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின்போது, வாா்டுக் குழுத் தலைவா் மு. மதிவாணன் உடனிருந்தாா்.