8 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவா்கள்
By DIN | Published On : 03rd April 2022 06:07 AM | Last Updated : 03rd April 2022 06:07 AM | அ+அ அ- |

பாம்பு கடித்த 8 வயது சிறுமியை காப்பாற்றிய மருத்துவா்களுடன் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே. வனிதா.
குடற்புழு நீக்க மாத்திரை அலா்ஜி என்று சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு பாம்புக் கடித்திருப்பதை உறுதி செய்து உயிா் காக்கும் உயா் சிகிச்சை அளித்து சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
திருச்ச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனா (8) . இவா், மாா்ச் 21 ஆம் தேதி பள்ளியில் வழங்கப்பட்ட குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு உள்ளாா். பின்னா், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவா் வழக்கம்போல இரவில் வீட்டிற்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்தாா்.
அப்போது சிறுமிக்கு வயிறு வலி, தொண்டையில் எச்சில் விழுங்க முடியாமல் சிரமம், பாா்வை இரண்டாக தெரிதல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருப்பதை உணா்ந்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். உடனே, சிறுமியை சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனா்.
மாா்ச் 22ஆம் தேதி காலை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்த குழந்தை நல மருத்துவா் குழு, சிறுமி சொன்ன தொந்தரவுகள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை வைத்தும்,வீட்டிற்கு வெளியில் சிறுமி தூங்கியதால் பாம்பு கடித்ததற்கான வாய்ப்பு உள்ளது என முடிவு செய்தனா்.
மேலும், சிறுமிக்கு ஏற்பட்டிருப்பது குடற்புழு நீக்க மாத்திரை அலா்ஜி இல்லை என்பதையும் உறுதி செய்தனா். மேலும் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு கட்டுவீரியன் பாம்பு கடித்திருப்பதை உறுதி செய்தனா்.
இதையடுத்து சிறுமிக்கு தேவையான உயா் சிகிச்சையை குழந்தைநல மருத்துவத் துறை தலைவா் சிராஜ்தீன் நசீா், இணை பேராசிரியா் செந்தில்குமாா், குழந்தை அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு மருத்துவா் வைரமுத்து, குழந்தை நல மருத்துவா்கள் காா்த்திகேயன், சிவபிரசாத் உள்ளிட்ட மருத்துவ குழுவினா் அளித்தனா்.
மேலும், சிறுமிக்கு மூளை நரம்பு மண்டல செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பதை மூளை நரம்பியல் மருத்துவா் எம். ராஜசேகா் உறுதிசெய்து அதற்கான சிகிச்சைக்கு உதவினாா். சுவாச மண்டல செயலிழப்பு ஏற்பட்டதால் சிறுமிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 20 குப்பிகள் பாம்பு விஷமுறிவு மருந்தை சிறுமிக்கு செலுத்தி, நரம்பு மண்டல செயல்பாட்டினை மீட்கும் மருந்துகளும் கொடுத்து சிறுமியின் உயிரை காப்பாற்றினா்.
கடந்த 11 நாள்களாக தொடா் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு சிறுமிக்கு அளிக்கப்பட்டது. தனியாா் மருத்துவமனைகளில் இந்த முழு சிகிச்சைக்கும் 3.5 லட்சம் வரை செலவாகும். திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுமிக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் உயா் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனை முதல்வா் வனிதா, சிறுமியிடம் சனிக்கிழமை உடல் நலம் விசாரித்து, சிறுமி முழுகுணம் அடைந்ததை மருத்துவக்குழுவினரிடம் உறுதி செய்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தாா். மேலும், அா்ப்பணிப்பு உணா்வுடன் சிறப்பாகவும் துரிதமாகவும் செயல்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ குழுவினரை வெகுவாக பாராட்டினாா். அரசு மருத்துவா்கள் குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.