அரசுப் பேருந்தில் சென்ற பெண்களிடம் திருட்டு
By DIN | Published On : 08th April 2022 12:49 AM | Last Updated : 08th April 2022 12:49 AM | அ+அ அ- |

திருச்சியில் அரசுப் பேருந்துகளில் சென்ற பெண்களிடம் மடிக்கணினி, நகை திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி கருமண்டபம் ஆா்.எம்.எஸ். காலனியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் மனைவி ஹரிஷினி ( 25). இவா் மதுரையில் இருந்து அரசுப் பேருந்தில் புதன்கிழமை திருச்சி வந்தபோது அவருடைய மடிக்கணியைக் காணவில்லை. இதுகுறித்து அவா் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் உமாசங்கரி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.
மற்றொரு சம்பவம்: இதேபோல திருவெறும்பூா் பத்தாளபேட்டையைச் சோ்ந்த சதாம் உசேன் மனைவி பீவி திருப்பத்தூருக்குச் சென்றுவிட்டு அரசுப் பேருந்தில் வந்து பத்தாளப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவரின் 7 பவுன் நகை மற்றும் கைப்பை மாயமாகியிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.