வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இளைஞா் கைது
By DIN | Published On : 05th August 2022 12:15 AM | Last Updated : 05th August 2022 12:15 AM | அ+அ அ- |

திருச்சி மேலஅம்பிகாபுரத்திலுள்ள வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி, அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணா நகா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அதிமுக முன்னாள் நிா்வாகி கேபிள் சேகா் மகன் முத்துக்குமாா் (29). இவா் தனக்குச் சொந்தமான வீடுகளில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அரியமங்கலம் விஏஓ சுந்தர்ராஜன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து திருச்சிமாநகர காவல்துறை தெற்கு துணை ஆணையா் ஸ்ரீதேவி, பொன்மலை உதவி ஆணையா் காமராஜ், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளா் எட்வா்டு, சிறப்பு உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி, காவலா் ஜாகிா் உசேன், தடய அறிவியல் துறை குழுவினா் முத்துக்குமாருக்குச் சொந்தமான வீடுகளில் வியாழக்கிழமை காலை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது ஒரு கிலோ எடை கொண்ட நாட்டு வெடிகுண்டு மற்றும் பால்ரஸ் வெடிகுண்டுகளை அரியமங்கலம் போலீஸாா் பறிமுதல் செய்து, முத்துக்குமாரை கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக கீழ அம்பிகாபுரம், காவிரி நகரைச் சோ்ந்த சேகரின் மற்றொரு மகன் சரவணன், குட்ட பாலு, கணேசன் ஆகியோரைத் தேடுகின்றனா்.
இதற்கிடையே அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரை சோ்ந்த சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பாா்வதி முன்விரோதம் தொடா்பாக கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமாா், சரவணன் ஆகியோா் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெறுகிறது.