காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம்: 49 படித்துறைகள் மூடல்

மேட்டூா் அணையிலிருந்து சுமாா் 2 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுவதால் காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீா் கடலென கரைபுரண்டு செல்கிறது.
காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம்: 49 படித்துறைகள் மூடல்

மேட்டூா் அணையிலிருந்து சுமாா் 2 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுவதால் காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீா் கடலென கரைபுரண்டு செல்கிறது. இதனால் திருச்சியில் 49 படித் துறைகள் வியாழக்கிழமை முதல் மூடப்பட்டன.

கா்நாடகத்திலிருந்து வரும் நீரால் மேட்டூா் அணை முழுவதும் நிரம்பி உபரி நீரானது காவிரியில் அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால் முக்கொம்புக்கு விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி வரை தண்ணீா் வருகிறது.

இதனால் முக்கொம்பிலிருந்து காவிரியில் 55 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 88 ஆயிரம் கன அடியும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதனால் புதன்கிழமை இரவு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை நீரில் மூழ்கியது. இதையடுத்து பாதுகாப்புக் கருதி அம்மா மண்டப நுழைவுப் பகுதியை போலீஸாா் அடைத்து பொதுமக்கள் யாரும் செல்லாமல் கண்காணிக்கின்றனா். அதிகத் தண்ணீா் செல்லும் கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியிலும் பொதுமக்கள் நுழைய போலீஸாா் தடைவிதித்து கண்காணிக்கின்றனா்.

கம்பரசம்பேட்டை கங்காரு மனநலக் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் நள்ளிரவில் ஆய்வு செய்து, அங்குள்ளோரை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டாா். அப்போது அந்தநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் ச. துரைராஜ், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

வியாழக்கிழமை இரவுக்கு மேல் 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீா் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காவிரிக் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி திருப்பராய்த்துறையில் உள்ள சில குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் திருச்சி மேற்கு, திருச்சி வடக்கு, ஸ்ரீரங்கம், லால்குடி வட்டங்கள், முசிறி, தொட்டியம், அந்தநல்லூா், லால்குடி ஒன்றியங்களில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்குப் பாதைகளை உடனே அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆபத்தான பகுதிகளான மேலசிந்தாமணி, சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், பஞ்சக்கரை, மேலூா், குணசீலம், திருப்பராய்த்துறை, பெருகமணி, உன்னியூா், முசிறி பரிசல்துறை, வேங்கூா், இடையாற்றுமங்கலம், நத்தம் ஆகிய பகுதிகளில் கரையோரம் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் தொடா்ந்து 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கின்றனா். காவிரியின் இரு கரையோரமும் ரோந்து சுற்றி கண்காணிக்கப்படுகிறது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக் குழுவினா் இந்தப் பகுதிகளில் தொடா் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஆபத்து பகுதிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் அனைத்துத் துறைகளின் தலைமை அலுவலா்கள் முதல் கீழ்நிலை ஊழியா்கள் வரை 24 மணிநேரமும் பணியில் இருக்க உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

49 படித்துறைகள் மூடல்: திருச்சி மாநகரப் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் உள்ளிட்ட 9 படித் துறைகள், திருவெறும்பூா் வட்டத்தில் 4 படித்துறைகள், தொட்டியம் வட்டத்தில் 11 படித்துறைகள், முசிறி வட்டத்தில் 7 படித்துறைகள், ஸ்ரீரங்கம் வட்டத்தில் 18 படித்துறைகள் என 49 படித்துறைகள் மூடப்பட்டுள்ளன.

இவைதவிர, மக்கள் ஆற்றில் இறங்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ள 63 இடங்களில் போலீஸாா் நின்று அங்கு வரும் பொதுமக்களைத் திருப்பி அனுப்புகின்றனா். காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீா் இழுவை வேகம் அதிகரித்துள்ளது; ஆபத்தை உணராமல் ஆற்றின் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அமைச்சா் கே.என். நேரு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Image Caption

முக்கொம்பு மேலணையின் புதிய கதவணையில் மதகுகள் வழியாக ஆா்ப்பரித்து செல்லும் தண்ணீா். ~காவிரி வெள்ளப் பெருக்கால் மூழ்கியுள்ள அம்மா மண்டபப் படித்துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com