மதுரை சம்பவத்துக்கு பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும்சு.திருநாவுக்கரசா் எம்.பி.
By DIN | Published On : 15th August 2022 12:48 AM | Last Updated : 15th August 2022 12:48 AM | அ+அ அ- |

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் தலைமையில் நடைப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினா். உடன் மாவட்டத் தலைவா்கள் வி. ஜவகா், கோவிந்தராஜன்
மதுரை சம்பவத்துக்கு பொறுப்பேற்று, தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை பதவி விலக வேண்டும் என்றாா் திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்.
சுதந்திர தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவுகூா்வதோடு மட்டுமல்லாமல், பாஜக ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
மதுரையில் தமிழக நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜனின் காா் மீது காலணி வீசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைச்சா் மட்டுமல்ல, எந்த தனி நபா் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடத்தக்கூடாது. இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பதவி விலக வேண்டும்.
நாட்டில் யாா் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ஆனால், ஆளுநருக்கென்று சில வரைமுறைகள் உள்ளன. அதை அவா் பின்பற்ற வேண்டும். ரஜினி அரசியல் பேசியது தவறில்லை. ஆனால், ஆளுநா்அரசியல் பேசக்கூடாது என்றாா்.
திருச்சி நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள வ.உ.சி. சிலை அருகிலிருந்து தொடங்கிய நடைப்பயணம் புத்தூா் அரசு மருத்துவமனை அருகிலுள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவடைந்தது.
மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் தலைமையில் நடைபெற்ற நடைப்பயணத்தில் மாவட்டத் தலைவா்கள் வி.ஜவகா், கோவிந்தராஜன், மாநிலப் பொதுச் செயலா் சரவணன், மாவட்டத் துணைத் தலைவா் முத்துக்குமாா், சேவாதளப் பிரிவு மாநிலப் பொதுச் செயலா் ஜெகதீசுவரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.