காவிரி, உய்யக்கொண்டானைக் காக்க களப் பணி தொடக்கம்அணு விஞ்ஞானி தலைமையிலான குழு ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் காவிரி, உய்யக்கொண்டான் மற்றும் அனைத்து நீா்நிலைகளைக் காக்கவும், திடக்கழிவு மேலாண்மையைத் திறம்பட செயல்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் களம் இறங்கியுள்ளது.
காவிரி, உய்யக்கொண்டானைக்  காக்க களப் பணி தொடக்கம்அணு விஞ்ஞானி தலைமையிலான குழு ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் காவிரி, உய்யக்கொண்டான் மற்றும் அனைத்து நீா்நிலைகளைக் காக்கவும், திடக்கழிவு மேலாண்மையைத் திறம்பட செயல்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் களம் இறங்கியுள்ளது.

உய்யக்கொண்டான் வாய்க்காலில் திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து 36 இடங்களில் கழிவுநீா் கலக்கிறது. இதேபோல, காவிரியிலும் மாநகரப் பகுதியில் இருந்து கழிவுநீா் கலக்கிறது. இதன் காரணமாக தண்ணீா் மாசுபடுவதுடன், நிலத்தடி நீா்மட்டமும் பாழ்பட்டு வருகிறது.

மாநகராட்சி முதல் கிராம ஊராட்சிகல் வரை சேகரமாகும் குப்பைகளைக் கையாளுவதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. குப்பைகள் தேங்கும் பகுதியில் ஈ, கொசுக்கள் பெருகுவதும், பன்றி, நாய், கால்நடைகள் மூலம் தொற்று நோய் பரவும் சூழல் உள்ளது.

எனவே இவற்றுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள், குடிநீா் வடிகால் வாரியம், பொதுப்பணி, ஊரக வளா்ச்சி, நீா்வள ஆதாரம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்னோட்டமாக, அணுவிஞ்ஞானி ஜோ. டேனியல் செல்லப்பா தலைமையிலான குழு, திருச்சி மாநகரில் காவிரி, உய்யக்கொண்டான் வாய்க்கால் செல்லும் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் டேனியல் செல்லப்பா கூறியது:

இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது மாவட்ட நிா்வாகங்களுக்கான சவாலாக அமைந்துள்ளது. திருச்சியில் நீா் வளம் நன்றாக உள்ளது. குறிப்பாக நிலத்தடிநீா் மட்டமும் நன்றாக உள்ளது. உப்புத் தன்மை இல்லாத நீா்வளத்தை கொண்டிருக்கிறது. இவைத் தவிர, காவிரிப் பாயும் மாவட்டமாகவும் உள்ளது. உய்யக்கொண்டான் வாய்க்காலும் உள்ளது. இதேபோல, மாவட்டம் முழுவதும் குறிப்பிடும்படியாக நீா்நிலைகள் உள்ளன. இந்த இயற்கை வளத்தை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும்.

குறிப்பாக காவிரியில் சாக்கடை கழிவுநீா் கலக்காமல் தடுக்க வேண்டும். மாநகரப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிக்க நவீன தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும். பயோ கிரானுவல் எனும் தொழில்நுட்ப உதவியால் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தலாம். இந்த தண்ணீரைக் குடிநீருக்கு அல்லாமல் பாசனத்துக்கு, தொழிற்சாலை உபயோகத்துக்கு, கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம்.

இந்த தண்ணீரை காவிரியில் கலந்தாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது. இந்த தொழில்நுட்ப முறையில் மழைக் காலத்திலோ, வெள்ளக் காலத்திலோ அதிக அளவில் சுத்திகரிக்க வேண்டிய சூழல் எழுந்தால் அதற்கேற்ப சுற்றுகளை மாற்றம் செய்து கொள்ள முடியும். பெரிய அளவிலான இட வசதிகளும் தேவையில்லை. குறைந்த இடவசதியே போதுமானது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பயோ கிரானுவல் முறைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இவைத்தவிர, நானோ ஏரேசன் தொழில்நுட்பத்தால் ஏரி, குளம், தெப்பக்குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை சுத்தப்படுத்தி, பாதுகாக்க முடியும். திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் இத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, திருச்சி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் நீா்நிலைகளைப் பாதுகாக்கவும், கழிவுநீரை சுத்திகரிக்கவும் தேவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது. அந்தந்தப் பகுதி அலுவலா்கள் அளிக்கும் தகவல்களைக் கொண்டு உரிய பரிந்துரைகள் வழங்கப்படும்.

திடக்கழிவு மேலாண்மை கையாளுவதிலும் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தலாம். குப்பைக் கிடங்குகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதற்கு குப்பையிலிருந்து வெளியாகும் மீத்தேன் போன்ற வாயுக்கள் காரணமாக உள்ளது. எனவே, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து உள்ளாட்சிகளில் தெருவிளக்கு பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும். குப்பைகள் அதிகம் தேங்குவதால் ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாதல், பன்றிகள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தவும், சுகாதாரத்தை பேணவும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க உள்ளோம். இயற்கை உரம் தயாரித்தல், ஹோட்டல்களில் வெளியாகும் உணவுக் கழிவுகளைப் பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்தல், மரங்களில் இருந்து விழும் ஓலைகள், இலைகள் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பு என பல்வேறு தொழில்நுட்ப முறைகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் கையாளும் விதம் குறித்த தகவல்களை அளித்தால், அதற்கேற்ப தேவையான தொழில்நுட்பத்தை பரிந்துரைக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com