அரங்கநாத சுவாமி திருவடியை இன்று முதல் தரிசிக்க ஏற்பாடு!
By DIN | Published On : 25th August 2022 11:24 PM | Last Updated : 25th August 2022 11:24 PM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள மூலவா் அரங்கநாதா் திருவடியை வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தா்கள் தரிசிக்கலாம்.
ஸ்ரீரங்கம் கோயில் மூலவா் அரங்கநாதரின் திருமேனி சுதையால் செய்யப்பட்டது என்பதால் இவருக்கு அபிஷேகம், திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை.
இந்த சுதை திருமேனிக்கு ஆண்டில் இரு முறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித் தைலத்தைப் பூசி பாதுகாக்கின்றனா். அதன்படி முதல் தைலக் காப்பு கடந்த ஜுலை11 ஆம் தேதி மூலவருக்கு சாத்தப்பட்டது. அப்போது பெருமாளின் அனைத்து வஸ்திரங்களும், திருவாபரணங்களும் களையப்பட்டு திருமேனி முழுவதும் தைலம் பூசப்பட்டது. இந்த தைலக்காப்பு உலர 48 நாள்கள் ஆகும்.
அதுவரை பெருமாளின் திருமுகம் தவிா்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் திரையிடப்பட்டு மறைக்கப்பட்டது.
இந்நிலையில் தைலக்காப்பு உலா்ந்துவிட்டதை அா்ச்சகா்கள் உறுதி செய்து கோயில் நிா்வாகத்திற்கு தெரிவித்தனா். இதையடுத்து திருமேனி திரை அகற்றப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் பூஜைகளுக்குப் பின் பெருமாள் திருமேனி மீது புதிய வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு முழு அலங்காரத்துடன் நம்பெருமாளின் திருவடியை பக்தா்கள் தரிசிக்கலாம் எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.