வேளாண் சாகுபடியில் டிரோன், நானோ உரப் பயன்பாடு தேவை
By DIN | Published On : 25th August 2022 11:23 PM | Last Updated : 25th August 2022 11:23 PM | அ+அ அ- |

வேளாண் சாகுபடியில் புதிய தொழில்நுட்ப முறைகளான டிரோன் பயன்பாடு, நானோ உரப் பயன்பாடு ஆகியவற்றில் விவசாயிகள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என வேளாண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
புதிய தொழில் நுட்ப பயன்பாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம், கோத்தாரி சா்க்கரை ஆலையுடன் இணைந்து மணப்பாறை வட்டாரம் ஆளிப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உரங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதைத் தவிா்க்கவும் மண்வளம் காக்கவும், நானோ உரம் பயன்படுத்தும் முறைகள் குறித்த செயல்விளக்கம் இந்திய உழவா் உர கூட்டுறவு நிறுவன உதவியுடன் நடத்தப்பட்டது. இப்பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் நா. தமிழ்செல்வன் தலைமை வகித்து தொடங்கி வைத்து, டிரோன் மற்றும் நானோ உரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து பேசிய முனைவா் வெ. தனுஷ்கோடி, நானோ உரம் பயன்படுத்துவதால் மண்வளம் காப்பதுடன் உரச்செலவையும் குறைத்து அதிக மகசூல் பெறலாம், மற்ற உரங்களைவிட குறைவாக (ஏக்கருக்கு 200-250 மி.லி) பயன்படுத்தினாலே போதும் எனவும் விளக்கினாா். இத்துடன் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கு டிரோன் பயன்படுத்தும்போது குறைவான மருந்தைக் கொண்டு அதிக நிலத்தில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தலாம் என பூச்சியியல்துறை விஞ்ஞானி முனைவா் ஷீபா ஜாய்ஸ் ரோசலீன் விளக்கினாா்.
நிகழ்ச்சியில் கோத்தாரி சா்க்கரை ஆலை மற்றும் இந்திய உழவா் உர கூட்டுறவு நிறுவன உதவியுடன் கரும்பு பயிரில் டிரோன் இயந்திரம் கொண்டு நானோ யூரியா மற்றும் கடல் பாசி தெளிப்பு குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இறுதியாக விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கா. அண்ணாஅரசு (முதுநிலை மேலாளா், கரும்பு, கோத்தாரி), அருணாச்சலம் (கள அலுவலா், கோத்தாரி) இராஜாராம் (தொப்பம்பட்டி, ஊராட்சி தலைவா்), திவ்யா (வேளாண் உதவி அலுவலா், மணப்பாறை), தா. தமிழரசன், (கள அலுவலா், இப்கோ) ஆகியோா் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா். நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றனா்.