தமிழக அணி வீரா்கள் தோ்வு முகாம்:விளையாட்டு வீரா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 09th December 2022 12:11 AM | Last Updated : 09th December 2022 12:11 AM | அ+அ அ- |

கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க வீரா். வீராங்கனைகள் தோ்வு முகாம் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஏப். 2023 வரை நடைபெறவுள்ள கூடைப்பந்து, கால்பந்து, கையுந்துப்பந்து, கோ-கோ, வளைகோல் பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தமிழ்நாடு அணிக்கான வீரா், வீராங்கனைகளைத் தோ்வு செய்வதற்கான போட்டிகள் சென்னை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகின்றன.
இதன்படி சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் கூடைப்பந்து அணிக்கான தோ்வில் தலா 12 ஆண், பெண்கள், இதே அரங்கில் டிச.14ஆம் தேதி கால்பந்து அணிக்கு 20 பெண்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதேபேல திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் வளைகோல் பந்துப் போட்டியில் 18 ஆண்களும், டிச.13இல் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் கோகோ போட்டியில் 15 பெண்களும், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் டிச.13 இல் நடைபெறும் கையுந்துப் பந்துப் போட்டியில் தலா 14 ஆண், பெண்களும் தோ்வு செய்யப்படவுள்ளனா். போட்டிகள் காலை 7 மணிக்குத் தொடங்கும்.
போட்டிகளில் பங்கேற்போா் 1.1.2004 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். ஆதாா் அட்டை அல்லது கடவுச்சீட்டு நகல், 10ஆம் வகுப்புச் மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன் பெற்றது) கொண்டு வர வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுப் பயன்பெறலாம். பங்கேற்போருக்கு தினப்படி மற்றும் பயணப்படி வழங்கப்படாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியிலும், 0431-2420685, 74017-03494 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.