பாரம்பரிய வாழை ரகங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை: தேசிய வாழை ஆராய்ச்சி மைய புதிய இயக்குநா் தகவல்
By DIN | Published On : 09th December 2022 11:10 PM | Last Updated : 09th December 2022 11:10 PM | அ+அ அ- |

பாரம்பரிய வாழை ரகங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநா் முனைவா் ஆா்.செல்வராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
திருச்சியை அடுத்த தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக ஆா். செல்வராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
இம் மையத்தில் முதன்மை விஞ்ஞானியாக (வேளாண் நோயியல் துறை) பணியாற்றிய இவா், பயிா்ப் பாதுகாப்பு மற்றும் குறிப்பாக வாழை சாகுபடி துறையில் வைரஸ் நோய் மேலாண்மையில் 28 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி அனுபவம் பெற்றவா். புகழ்பெற்ற தேசிய மற்றும் சா்வதேச ஆராய்ச்சி இதழ்களில், 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். 80-க்கும் மேற்பட்ட திசு வளா்ப்பு நிறுவனங்களுக்கு சுமாா் 300 மில்லியன் திசு வளா்ப்பு ஆய்வு சான்றிதழ்களை வழங்கியுள்ளாா்.
இவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமநை கூறியது: தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை இந்தியாவிலேயே மிகச் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக உயா்த்தி, வாழை விவசாயிகளுக்கு பெரும்பயன் கிடைக்கும் வகையிலான ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வேன். செம்மை வாழை சாகுபடி, காா்பன் பாசிட்டிவ் வாழை சாகுபடி தொழில் நுட்பங்களை பான் இந்தியா அளவில் எடுத்துச் செல்லப்படும். புவியியல் குறியீடு மற்றும் பாரம்பரிய வாழை ரகங்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.