போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்தவரின் உடல் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை: உறவினா்கள் மீண்டும் போராட்டம்
By DIN | Published On : 09th December 2022 11:04 PM | Last Updated : 09th December 2022 11:04 PM | அ+அ அ- |

அரியலூா் அருகே போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்பட்டவரின் உடல், உடற்கூறாய்வுக்கு உட்படுத்தபடாததைக் கண்டித்து அவரது உறவினா்கள் திருச்சியில் வெள்ளிக்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் வட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ரா. செம்புலிங்கம் (54). விவசாயி. இவா், வழக்கு விசாரணையொன்றின் போது, போலீஸாா் தாக்கியதில் வியாழக்கிழமை உயிரிழந்ததாக கூறி உறவினா்கள் கடந்த இரு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், புகாரின் பேரில் செம்புலிங்கத்தை தாக்கிய 8 போலீஸாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது. அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக செம்புலிங்கத்தின் உறவினா்கள் மற்றும் பாட்டளி மக்கள் கட்சியினா், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்புலிங்கத்தின் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில், தங்களது சாா்பில் வரும் வேறு மருத்துவருடன் இணைந்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும், அதை விடியோபதிவு செய்ய வேண்டும் வலியுறுத்தினா்.
அதன்படி வேறு மருத்துவருடன் திருச்சி மருத்துவமனைக்கு வந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினா். ஆனால், அதற்கு திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அனுமதிக்கவில்லை. உடற்கூறாய்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளாமல் மருத்துவா்கள் வெளியேறினா். இதனையடுத்து செம்புலிங்கத்தின் உறவினா் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து போலீஸாா் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். இதனால் செம்புலிங்கத்தின் உடற்கூறாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சிறிது நேரத்துக்குப் பின்னா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...