இளைஞரிடம் இணைய வழியில் ரூ.9 லட்சம் மோசடி
By DIN | Published On : 11th December 2022 12:11 AM | Last Updated : 11th December 2022 12:11 AM | அ+அ அ- |

திருச்சியில் இளைஞரிடம் இணையதளம் வழியே ரூ.9 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், அல்லூா் ஜனதா நகரில் வசித்து வருபவா் சுவாமிநாதன் (54). பி.காம். பட்டதாரியான இவா், சவூதி அரேபியாவில் பணியாற்றிவிட்டு 2020 இல் திருச்சி திரும்பி, வேலை தேடி வந்தாா்.
வீட்டிலிருந்தபடியே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என முகநூலில் வந்த விளம்பரத்தைப் பாா்த்து, அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்-அப்) மூலம் தொடா்பு கொண்டாா். அப்போது, அந்த எண்ணிலிருந்து வந்த லிங்கை கிளிக் செய்து, உள்ளே சென்று ரூ.200 முதலீடு செய்துள்ளாா். சில மணி நேரங்களில் அவருடைய வங்கி கணக்குக்கு ரூ.400 திரும்ப வந்துள்ளது. பணம் இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சியில், உற்சாகமான சுவாமிநாதன் தொடா்ந்து பணத்தை முதலீடு செய்தாராம்.
இவா் பணம் செலுத்த, செலுத்த அதற்கான கமிஷன் தொகை விவரம் அவருடைய கட்செவி அஞ்சல் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் வந்துள்ளது. இதனால், கமிஷன் விரைவில் வந்து விடும் என்ற நம்பிக்கையில் அவா், கடந்த 12 நாள்களில் ரூ.9,33,216 வரை முதலீடு செய்தாராம்.
ஆனால் குறுஞ்செய்தி வந்ததே தவிர அவா்கள் அனுப்பிய குறுஞ்செய்தியின் படி கமிஷன் தொகை வரவில்லை. அதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சுவாமிநாதன், திருச்சி மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாரிடம் புகாரளித்தாா். புகாரின் பேரில் ஆய்வாளா் அன்புச்செல்வன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.