பழைய காவிரிப் பாலத்தில் பயணிகள் ஆட்டோவை அனுமதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் மனு
By DIN | Published On : 13th December 2022 01:30 AM | Last Updated : 13th December 2022 01:30 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா்.
பழைய காவிரிப் பாலத்தில் பயணிகள் ஆட்டோவை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் ஊா்வலமாக வந்து மனு அளித்தனா்.
புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி சாா்பில், மாவட்டத் தலைவா் கோபி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, செய்தியாளா்களிடம், மாவட்டத் தலைவா் கோபி கூறியது: காவிரி பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால், காலவிரயமும், போக்குவரத்து நெருக்கடியும் தவிா்க்க முடியாமல் உள்ளது. ஆகவே, பாலத்தின் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், பழைய காவிரி பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் இருசக்கர வாகனங்கள் செல்லலாம் என்கின்றனா். இந்தப் பாலத்தில் ஒருவழிப்பாதையில் இருசக்கர வாகனங்களை அனுமதித்தால் பயணிகள் ஆட்டோவுக்கும் அனுமதியளிக்க வேண்டும் என்றாா்.
இதில், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்புச் சங்க சிறப்புத் தலைவா் ஜீவா, செயலா் மணலிதாஸ், பொருளாளா் செல்வராஜ் மற்றும் சங்க உறுப்பினா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், மக்கள் அதிகாரம், மகஇக அமைப்பினா், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினா் சங்கக் கொடிகளுடன், கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி ஊா்வலமாக வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.