இந்திய வாழைகளின் ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும்

பாரம்பரிய வாழைகளின் ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும் என்றாா் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவா் எம். அங்கமுத்து.
திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கண்காட்சியில் வாழைகளை பாா்வையிடும் (வலமிருந்து) தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி
திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கண்காட்சியில் வாழைகளை பாா்வையிடும் (வலமிருந்து) தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய வாழைகளின் ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும் என்றாா் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவா் எம். அங்கமுத்து.

பாரம்பரிய மற்றும் புவிசாா் குறியீடு கொண்ட வாழை ரகங்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடா்பான தேசியளவிலான 2 நாள் கருத்தரங்கு திருச்சியில் புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் நடைபெறும் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து எம். அங்கமுத்து மேலும் பேசியது:

மொத்த உற்பத்தியில் 20 சத வாழையை மட்டுமே உற்பத்தி செய்யும் மேற்கத்திய நாடுகள் தங்களது வாழைகளை 80 சதம் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால், மொத்தத்தில் 80 சதத்தை உற்பத்தி செய்யும் இந்தியாவிலிருந்து 20 சதத்துக்கும் குறைவாகவே வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.

கடந்தாண்டு 1.8 லட்சம் கோடி வாழை ஏற்றுமதியாகியுள்ளது. வரும் காலங்களில் குறைந்தபட்சம் 50 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பாரம்பரிய வாழைகள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய கன்டெய்னா்களை பயன்படுத்தி சுவைமிக்க நமது பாரம்பரியப் பழங்களை தரமாகவும், நோ்த்தியாகவும் பேக்கேஜிங் செய்து வழங்கினால் உலகச் சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைக்கும்.

குறிப்பாக மதிப்புக் கூட்டப்பட்ட வாழை மற்றும் வாழையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பொருள்களில் தற்போது 4ஆவது இடத்திலிருக்கும் வாழையை முதலிடத்துக்கு கொண்டு செல்ல தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், வாழை உற்பத்தியாளா்கள், ஏற்றுமதியாளா்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன் பேசுகையில், இந்தியாவிலிருந்து ரூ.1300 கோடி மதிப்புள்ள 3.41 லட்சம் மெட்ரிக் டன் வாழை கடந்த 2021ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்திய வாழைகளில் நஞ்சன்குட் ரசபலே, கமலாபூா் சிவப்பு வாழை, விருப்பாட்சி, சிறுமலை உள்ளிட்ட பல வாழைகளுக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது. 5 தலைமுறைகளாக வாழை உற்பத்தி செய்யும் விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

நாகா்கோயில் மட்டி, திருக்காட்டுபள்ளி பூவன், தொட்டியம் ரஸ்தாலி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வாழை உற்பத்திக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம் என்றாா் அவா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தா் வி. கீதாலட்சுமி பேசுகையில், தமிழகத்தில் புவிசாா் குறியீடு பெற்ற வாழைகள் மற்றும் பாரம்பரிய வாழை ரகங்களைப் பாதுகாத்து, அவற்றின் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என்றாா்.

பாகல்கோட்டில் உள்ள தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.எம். இந்திரேஷ், வேளாண் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டலத் தலைவா் ஆா். ரவீந்திரா, வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகத்தின் கூடுதல் செயலா் ராஜலெட்சுமி தேவராஜ், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் கூடுதல் இயக்குநா் வி.பி. படேல், முதன்மை விஞ்ஞானிகள் எஸ். உமா, பி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

நிகழ்வில் புவிசாா் குறியீடு பெற்ற வாழை ரகங்கள், பாரம்பரிய வாழை ரகங்கள் என 150-க்கும் மேற்பட்ட வாழைகள் இடம்பெற்றுள்ள கண்காட்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் அலுவலா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com