கொலை வழக்கில் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் தீா்ப்பு
By DIN | Published On : 22nd December 2022 12:22 AM | Last Updated : 22nd December 2022 12:22 AM | அ+அ அ- |

திருச்சியில் நடந்த கொலை வழக்கில் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
நாகா்கோவிலைச் சோ்ந்தவா் ஜெகன் பாபு (30). அவரது மனைவி அஜிதா (35) சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்தாா். இவரும் வேலூரைச் சோ்ந்த இயன்முறை மருத்துவா் (பிசியோதெரபிஸ்ட்) ஜான்பிரின்ஸ் (35) என்பவரும் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்தனா்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் இருவருக்கும் தொடா்பு இருந்த நிலையில், அஜிதாவும் ஜான் பிரின்சும் சோ்ந்து ஜெகன்பாபுவை தீா்த்துக்கட்ட திட்டமிட்டனா்.
அதன்படி கடந்த 2016 ஜூலை 8 ஆம் தேதி ஜான் பிரின்சு ஜெகன்பாபுவை திருச்சிக்கு ரயிலில் அழைத்து வந்து முடுக்குப்பட்டி ரயில்வே பாலம் அருகே வைத்து அவரின் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றாா். இதுதொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
திருச்சி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி பாபு ஜான் பிரின்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். விசாரணையில் அரசு தரப்பு வழக்குரைஞராக சவரிமுத்து ஆஜரானாா்.
இந்த வழக்கில் 2 ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்த அஜிதா இரு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.