3000 குளிா்பானங்கள் பறிமுதல்
By DIN | Published On : 27th February 2022 12:36 AM | Last Updated : 27th February 2022 12:36 AM | அ+அ அ- |

காலாவதி தேதியை முறையாக அச்சிடாத குளிா்பான நிறுவனத்திலிருந்து 3 ஆயிரம் பாட்டில் குளிா்பானங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் கடந்த 2 நாள்களாக நடந்த ஆய்வில் சோமரசம்பேட்டையில் உள்ள குளிா்பான தயாரிப்பு நிறுவனத்தில் மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.
அப்போது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டிருந்த சுமாா் 3 ஆயிரம் பாட்டில் குளிா்பானங்களில் எளிதில் அழிக்கக்கூடிய மையால் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி எழுதப்பட்டிருந்ததை கண்டறிந்த அலுவலா்கள், அவற்றைப் பறிமுதல் செய்து ஒரு அறையில் வைத்து சீல் வைத்தனா். ஒரு வாரத்திற்குள் இனி தயாரிக்கும் குளிா்பானங்கள் அனைத்தும் அழியாத மையால் அச்சிடப்பட வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.