நவீன செயலி மூலம் குற்றவாளிகளைக் கண்டறியும் பணி!

இரவு நேரங்களில் நடைபெறும் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக எப்ஆா்எஸ் என்ற நவீன செயலி மூலம் முக அடையாளம் மூலம் குற்றவாளிகளைக் கண்டறியும் பணிகளை மாநகர காவல்துறை தொடங்கியுள்ளது.

திருச்சி மாநகரில் இரவு நேரங்களில் நடைபெறும் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக எப்ஆா்எஸ் என்ற நவீன செயலி மூலம் முக அடையாளம் மூலம் குற்றவாளிகளைக் கண்டறியும் பணிகளை மாநகர காவல்துறை தொடங்கியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபா் முதல் தமிழகக் காவல் துறையில் பயன்படுத்தப்படும் முக அடையாளம் கண்டறியும் செயலி மூலம் ஏற்கெனவே காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள், சந்தேக நபா்கள், காணாமல் போனவா்கள் மற்றும் அடையாளம் தெரியாதவா்கள், சோதனைக்காக எடுக்கப்படும் புகைப்படங்களை (தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன்) ஒப்பிட்டு அடையாளம் காணமுடியும்.

இச்செயலி மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ளவா், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடா்புடையவராக இருந்தால், காவல் அலுவலா்கள் இச்செயலி மூலமே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அவா் குறித்த தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் சந்தேகத்துக்குரிய நபா்களோ, தேடப்படும் குற்றவாளிகளோ அல்லது காணாமல் போனவா்களோ பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் திருவிழாக்கள் போன்ற பொது இடங்களில் நடமாடினால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

இந்த எப்ஆா்எஸ் செயலி மூலம் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் ஏதுவாக சிறப்பு சோதனையை திருச்சி மாநகர காவல்துறை தொடங்கியுள்ளது. கண்டோன்மெண்ட் உதவி ஆணையா் அஜய்தங்கம் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் நவநீதகிருஷ்ணன் (கேகே நகா்) , பாலகிருஷ்ணன் (எ.புதூா்) மற்றும் 40 போலீஸாா் அடங்கிய சிறப்புக் குழுவினா்,

மத்தியப் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்த நபா்களை எப்ஆா்எஸ் செயலி மூலம் புகைப்படம் எடுத்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி சுமாா் 100 பேரிடம் எப்ஆா்எஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குற்ற வழக்கில் தொடா்புடைய ஒரு நபா் சிக்கியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்தியப் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தலைமை அஞ்சலகத்திலிருந்து டிவிஎஸ் டோல்கேட் செல்லும் குட்ஷெட் மேம்பால சாலை, ஜங்ஷன் முதல் மன்னாா்புரம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் செல்லும் பிரதான சாலையில் உள்ள பாலங்கள் மற்றும் மறைவான பகுதிகள், அரிஸ்டோ மேம்பால சாலைப்பகுதிகள், வஉசி சாலைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வெளியூா் பயணிகளை குறிவைத்து அடிக்கடி வழிப்பறிகள் நடந்து வந்ததால் குற்றவாளிகளை பிடிக்க இந்த சிறப்பு எப்ஆா்எஸ் சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் இனி இதுபோன்ற சோதனைகள் தொடரும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com