காவிரி, கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
By DIN | Published On : 17th July 2022 01:25 AM | Last Updated : 17th July 2022 01:25 AM | அ+அ அ- |

மேட்டூா் அணை உபரிநீா் திறப்பையொட்டி, திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து சனிக்கிழமை காவிரி ஆற்றில் சீறிப்பாயும் தண்ணீா்.
திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கா்நாடகம் மற்றும் கேரளத்தின் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கா்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீா் மேட்டூா் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால் மேட்டூா் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிட்டது. இதையொட்டி, அணையிலிருந்து 1.20 லட்சம் கன அடிக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காவிரியில் 40 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 80 ஆயிரம் கன அடியும் திறக்கப்படும். எனவே, கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
காவிரியில் அதிக நீா்வரத்து வந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவா்களோ சுயபடம் (செல்ஃபி) எடுக்கக் கூடாது.
முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் உள்ள தற்காலிக பாதை வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது. புதிதாக கட்டப்படும் கொள்ளிடம் பாலத்திலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், அந்தந்தப் பகுதி வட்டாட்சியா்களை தொடா்பு கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள தெரிவிக்கலாம். பச- நஙஅதப என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.