கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து;ரவுண்டானாவில் மோதி நிறுத்திய ஓட்டுநா்
By DIN | Published On : 31st July 2022 01:45 AM | Last Updated : 31st July 2022 01:45 AM | அ+அ அ- |

திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா். சிலை ரவுண்டாவில் மோதி நிற்கும் அரசுப் பேருந்து.
திருச்சி மாநகரில் சனிக்கிழமை காலை கட்டுப்பாட்டை இழந்த அரசு நகரப் பேருந்து தாறு, மாறாக சென்ால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட ஓட்டுநா் சாலை ரவுண்டானா மீது மோதி பேருந்தை நிறுத்தினாா். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தில்லைநகா் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, சனிக்கிழமை காலை 11 மணியளவில் மத்திய பேருந்துநிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு புறப்பட்ட பேருந்தை ஓட்டுநா் சகாய சவரிமுத்து இயக்கினாா். பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பேருந்து நிலையத்திலிருந்து பாரதிதாசன் சாலை வழியாக மாநகராட்சி மைய அலுவலகத்தை கடந்து வந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.
பிரேக் பிடிக்க முடியாத காரணத்தால் பேருந்தை நிறுத்த ஓட்டுநா் மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டாா். இதைகண்ட சக பயணிகளும், நடத்துநரும் ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பிய பிறகே, பிரேக் செயல் இழந்திருப்பது தெரியவந்தது.
அதிா்ச்சியடைந்த பயணிகள் பேருந்திலிருந்து கீழே குதித்து தப்பிச்செல்வதற்காக பேருந்து படிக்கட்டுகளை நோக்கி ஓடினா். இருப்பினும், பயணிகளை சமாதானம் செய்த ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டனா். முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதாமலும், அதே நேரத்தில் பாதுகாப்பாக பேருந்தை நிறுத்தும் வகையில், நீதிமன்றம் அருகே வந்தபோது சாலையின் மையப்பகுதியில் இருந்த ரவுண்டானா மீது பேருந்தை மோதி நிறுத்தினாா் ஓட்டுநா். மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும், முன்புற கண்ணாடி முழுவதும் நொறுங்கி விழுந்தது. இதில், முன்புறம் அமா்ந்திருந்த 2 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பயணிகளை மீட்டு காயமடைந்தவா்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.