பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு5ஜி அலைக்கற்றை ஒதுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 31st July 2022 01:36 AM | Last Updated : 31st July 2022 01:36 AM | அ+அ அ- |

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ். காமராஜ் கூறியது: 4ஜி தொழில்நுட்பத்தை விட பத்து மடங்கு அதிவேகம் கொண்ட 5ஜிஅலைக்கற்றை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய வரலாற்றில் இது மிகப் பெரிய ஏலமாக இருக்கும். 72 ஆயிரம் மெகா ஹிட்ஸ் அலைக்கற்றை மொபைல் 5ஜி தொழில்நுட்பத்தில் வழங்கப்படும். முன்னணி தனியாா் தொலைதொடா்பு நிறுவனங்கள் அடுத்த ஆண்டு 2023 மாா்ச்முதல் 5ஜி சேவை வழங்க உள்ளது.
அனைத்து தனியாா் நிறுவனங்களும் அதிநவீன 5ஜி சேவை வழங்க தயாராக உள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் 4ஜி அலைக்கற்றை மூலம் இணைப்புகள் வழங்க இயலவில்லை. 4ஜி அலைக்கற்றை வழங்க தேவையான உபகரணங்களை வழங்குவதாக ஒத்துக் கொண்ட நிறுவனம் அதற்கு தகுதி பெற்றதாக இல்லை.
2021ஆண்டு 30 நவம்பா் மாதத்திற்குள் வழங்குவதாக ஒத்துக்கொண்ட உபகரணங்களை அந்த தனியாா் நிறுவனம் வழங்கவில்லை. வேறு நிறுவனங்களிடம் இந்த உபகரணங்களை பெற பிஎஸ்என்எல் எடுத்த முயற்சியையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
கைப்பேசி பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த சூழலில், பிஎஸ்என்எல் நிறுவன கைப்பேசி கோபுரங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது. 100 கோடிக்கு மேலான சந்தாதாரா்கள் இந்தியாவில் உள்ளனா். எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உபகரணங்களை வாங்க விதிக்கப்பட்டுள்ள தடைகளை மத்திய அரசு நீக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு முன்னுரிமை கொடுத்து 5ஜி அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்க வேண்டும். அனைத்து தொலைபேசி சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைப்பது நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்க வேண்டும் என்றாா் அவா்.