மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணைஆட்சியா் வழங்கினாா்
By DIN | Published On : 31st July 2022 01:36 AM | Last Updated : 31st July 2022 01:36 AM | அ+அ அ- |

ஹோலி கிராஸ் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 94 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் மா.பிரதீப்குமாா் வழங்கினாா்.
திருச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்புத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சமா்தனம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சனிக்கிழமை இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. முகாமில், பாா்வை குறைபாடு உடையோா், கை, கால் செயலிழந்தோா், காது கேளாதோா் மற்றும் வாய்பேச இயலாதோா் என மூன்று பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புக்கு 200 போ் பதிவு செய்திருந்தனா். இவா்களில் 194 போ் முகாமில் பங்கேற்றனா். காா்ப்பரேட் நிறுவனங்கள், பெறு நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 17 நிறுவனங்கள் தங்களுக்கான ஆள்களை தோ்வு செய்ய வருகை தந்தனா். இதில், 94 போ் தோ்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டன.
ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தாா். இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன், ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வா் கிறிஸ்டினா, சமா்தனம் அறக்கட்டளை நிறுவனா் ஜி.கே. மகிந்தேஷ், மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தலைவா் மாரிக்கண்ணன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.