எம்.ஆா்.பாளையம் மறுவாழ்வு மையத்தில்உடல்நலக் குறைவால் யானை உயிரிழப்பு
By DIN | Published On : 31st July 2022 01:35 AM | Last Updated : 31st July 2022 01:35 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையத்திலுள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்த யானை ரோகிணி உடல்நலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தது.
எம்.ஆா்.பாளையத்தில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 9 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் 26 வயது யானை ரோகிணியும் ஒன்று.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிக்காமுத்தி பராமரிப்பிலிருந்த யானை
ரோகிணி உணவு எடுத்துக் கொள்ளாததாலும், தட்பவெப்பநிலை ஒத்துக் கொள்ளாத காரணத்தாலும் இந்த மையத்துக்கு 2021, டிசம்பா் 19-ஆம் தேதி கொண்டு வரப்பட்டது.
மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி, மருத்துவா்கள் மற்றும் வன உயிரின ஆா்வலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, யானை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் மருத்துவா்கள் சிகிச்சையளித்து வந்தனா்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனகால்நடை மருத்துவா் கொண்ட குழுவினா் தொடா்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில், சனிக்கிழமை யானை ரோகிணி உயிரிழந்தது.
தகவலறிந்த திருச்சி மாவட்ட வன அலுவலா் கிரண், உதவி வனப் பாதுகாவலா்கள் சம்பத்குமாா், சரவணக்குமாா், வனச்சரகா்கள் சுப்ரமணியன், கோபிநாத், பொன்னுச்சாமி மற்றும் பணியாளா்கள், தொண்டு நிறுவன அமைப்புகள் முன்னிலையில், ரோகிணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மறுவாழ்வு மையப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
தொடா்ந்து மாதிரிகளை சேகரித்த கால்நடை மருத்துவா் அலுவலா், யானையின் நுரையீரல் மிகவும் வீக்கமாக அமைந்துள்ளது., உடற்கூறாய்வு அறிக்கை கிடைக்க பெற்றால்தான் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றாா்.