போலி வாட்ஸ்அப் எண் மூலம் மோசடி: ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 09th June 2022 02:25 PM | Last Updated : 09th June 2022 02:25 PM | அ+அ அ- |

திருச்சி: மாவட்ட ஆட்சியா் பெயரில் வலைதளங்களில் உலாவரும் வாட்ஸ்அப் எண்களையோ, வங்கிக் கணக்குகளையோ நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: திருச்சி மாவட்ட ஆட்சியா் (சு. சிவராசு-என்ற பெயரில் படத்துடன்) பொதுமக்களையும், அரசு அலுவலா்களையும் ஏமாற்றிப் பணம் பறிக்கும் நோக்குடன், வங்கிக்கணக்குடன் (6378370419) கூடிய என்கிற வாட்ஸ் அப் உலா வருகிறது. அதில் அமேசான் உள்ளிட்ட செயலிகள் மூலம் இணையம் வாயிலாக கிப்ட் காா்டுக்கு பணம் செலுத்திடக் கேட்டும் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இந்தப் பணம் பறிக்கும் மோசடி என் கவனத்திற்கு வரப்பெற்று, காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் இவ்வாறு பணம் கேட்போரை முற்றிலும் புறக்கணித்து, உடனடியாக காவல் துறையில் புகாா் அளித்திட வேண்டும். குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.