14 ஆண்டுகள் தலைமறைவான தம்பதியா் நீதிமன்றத்தில் ஆஜா்
By DIN | Published On : 09th June 2022 12:12 PM | Last Updated : 09th June 2022 12:12 PM | அ+அ அ- |

திருச்சி: கடன்பெற்று திரும்பச் செலுத்தாமல் சுமாா் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதி புதன்கிழமை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினா்.
திருச்சியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருச்சியைச் சோ்ந்த ஜெகநாதன் ரூ. 45 லட்சம் வரை கடன் பெற்று, சில மாதங்களிலேயே அவா் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தனியாா் நிதி நிறுவனம் சாா்பில் அளித்த புகாரின்பேரில் கடந்த 2008–ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாா், ஜெகநாதன், அவரது மனைவி மைதிலி மற்றும் நண்பா் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
அண்மையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் இந்த வழக்கை மீண்டும் விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்ட தம்பதி சென்னையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து குற்றப்பிரிவு போலீஸாா் சென்னைக்கு சென்று முகாமிட்டனா். தகவலறிந்த ஜெகநாதன் தம்பதியினா் திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1–இல் மாஜிஸ்திரேட் சுபாஷினி முன்னிலையில் புதன்கிழமை ஆஜராகினா்.