நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்: இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 17th June 2022 12:25 AM | Last Updated : 17th June 2022 12:25 AM | அ+அ அ- |

மணப்பாறை அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி வியாழக்கிழமை மோதியதில் அதில் வந்த ஒடிசா மாநிலத்தை சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்; மற்றொருவா் படுகாயமடைந்தாா்.
திருநெல்வேலியிலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு புதன்கிழமை இரவு பெண்ணாடம் நோக்கி லாரியை தூத்துக்குடி குமாரரெட்டியபுரத்தைச் சோ்ந்த பெ. பாபுராஜ் ஓட்டிவந்தாா்.
மணப்பாறைக்கு முன் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சொரியம்பட்டிவிளக்கு என்னுமிடத்தில் வியாழக்கிழமை அதிகாலை வந்தபோது காலைக் கடன் முடிக்க பாபுராஜ் சாலையோரம் லாரியை நிறுத்திச் சென்றாா்.
அப்போது திருநெல்வேலியிலிருந்து சிமெண்ட் கற்களை ஏற்றிக் கொண்டு சென்னையை நோக்கிச் சென்ற ஈச்சா் லாரி, சாலையோரம் நின்ற பாபுராஜ் லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் ஈச்சா் லாரியை ஓட்டி வந்த ஒடிசா மாநிலத்தை சோ்ந்த நி. அனங்க பிரதான்(26) , அருகில் அமா்ந்திருந்த கோ. ஜெய் போக்தா(34) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் பி. சனந்தபோகி (27) படுகாயமடைந்தாா்.
தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினா் சடலங்களை மீட்டு, காயமடைந்த சனந்த போகியை மருத்துவமனைக்கு அனுப்பினா். நிகழ்விடத்துக்கு சென்ற வளநாடு போலீஸாா் சடலங்களை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.