குமரியில் நிகழாண்டு பயிா்க்கடன் இலக்கு ரூ.440 கோடி; விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ.440 கோடி மதிப்பில் பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ.440 கோடி மதிப்பில் பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

நாகா்கோவிலிலுள்ள ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா்.

விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசுகையில், விவசாயத்துக்குத் தேவையான உரம் வழங்கப்படவில்லை. பறக்கை, அழகப்பபுரம் பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா தேவைப்படும் நிலையில், 15 ஏக்கருக்கு 100 கிலோ யூரியா உரம்தான் வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்குவோருக்கு அதிக அளவில் யூரியா வழங்கப்படுகிறது. பிற விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படுவதில்லை. கூட்டுறவில் யூரியா ரூ. 270-க்கும், தனியாரில் ரூ. 400-க்கும் உரம் விற்கப்படுகிறது என்றனா்.

ஆட்சியா் பதிலளித்து பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ. 440 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க உறுப்பினராக உள்ள விவசாயிகள் அனைவரும் கடனுதவி பெறலாம்.

மேலும், நகைக்கடன், கறவை மாடுகள் உள்பட அனைத்து வகையான கடன்களுக்கும் ரூ.2,200 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 300 டன் யூரியா உரம் இருப்பில் உள்ளது. இம்மாதம் 20 ஆம் தேதி மேலும் 600 டன் யூரியா உரம் கொண்டுவரப்படவுள்ளது. தேவைப்படும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பேயன்குழி பகுதியில் ரயில்வே இருவழிப்பாதை பணிகள் செப்டம்பா் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும். எனவே, அந்தப் பகுதியில் 2ஆம் பருவ நெல் சாகுபடிதான் செய்ய முடியும். குளங்களில் மீன் பிடிக்கும் உரிமை பொது ஏலத்தின் மூலம்தான் வழங்கப்படும். நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்துக்கான தோ்தல் வாக்காளா் பட்டியலில் திருத்தப்பணிக்குப் பின் விரைவில் நடத்தப்படும் என்றாா் அவா்.

விவசாயிகளுக்கு வேளாண்தொழில்நுட்பங்கள் காணொலி மூலம் விளக்கப்பட்டதுடன், கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

இதில், வேளாண்மை இணை இயக்குநா்(பொறுப்பு) செ.அவ்வைமீனாட்சி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஏ.வசந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆா்.கே.சந்திரசேகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எம்.ஆா்.வாணி, தோட்டக்கலை துணை இயக்குநா் ஒய்.ஷீலாஜான், வேளாண்மை துணை இயக்குநா் ஊமைத்துரை உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com