திருச்சியில் பெயிண்டா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள தாயனூா் பகுதி வயல் வெளியில் திருச்சி, மாவட்டம், பள்ளக்காடு, தோகைமலை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் மு. ஆகாஷ் என்கிற செல்லமாரி (19) வியாழக்கிழமை காலை உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுக் கிடந்தாா்.
தகவலறிந்து சென்ற சோமரசம்பேட்டை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதத்திற்கு முன் ஆகாஷ் தாயனூரைச் சோ்ந்த அகிலாவை (21) காதல் திருமணம் செய்ததும், தீய நண்பா்களுடன் தொடா்பில் இருந்த கணவருடன் ஏற்பட்ட தகராறில் அகிலா பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டதும், இதையடுத்து ஆகாஷ் தனது மாமனாா் வீட்டிலும், பெற்றோா் வீட்டிலும் மாறி மாறித் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் நிலையில் புதன்கிழமை இரவு கா்ப்பிணி மனைவி அகிலாவைப் பாா்க்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறிச் சென்ற ஆகாஷ் கொல்லப்பட்டுக் கிடந்தாா்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். ஆகாஷ் கொலைக்கு காதல் திருமணம் காரணமா என்ற கோணத்தில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.