

தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சாா்பில் ‘வெறுப்பு அரசியலை வேரறுப்போம்’ என்னும் தலைப்பிலான கவன ஈா்ப்பு மாநாடு திருச்சி புத்தூா் பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவா் மௌலானா காஜா முயீனுத்தீன் பாகவி தலைமை வகித்தாா். அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் முன்னிலை வகித்தனா்.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன், இந்திய கம்யூ. மாநிலச் செயலா் இரா. முத்தரசன், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மதுரை எம்பி சு. வெங்கடேசன், காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளா் சசிகாந்த் செந்தில், ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்டம் நிறுவனா் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனா் அருட்தந்தை ஜெகத் கஸ்பா் ராஜ் ஆகியோா் பேசினா்.
மாநாட்டில் மதத்தின் பெயரால் மக்களைக் கூறுபோடும் மதவெறி பிடித்த சங்பரிவாரக் கும்பலின் வெறுப்பு அரசியலை வேரறுக்க சமூகம், ஊடகங்கள், நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்கள், அரசாங்கம் ஆகியவை ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும். அண்ணல் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜகவின் நுபுா் ஷா்மாவையும், அவரது பேச்சை முகநூலில் பதிவிட்ட பாஜகவின் நவீன் ஜிண்டாலையும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அல்லது அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மதக்கலவரத் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மமக தலைவரும், பேராசிரியரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லாஹ், மமக பொதுச் செயலரும் எம்எல்ஏவும் அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் பி. அப்துல் ஹமீத், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் மௌலானா மன்சூா் காஷிஃபி, பஷீா் அஹமது, பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலச் செயலா் முகம்மது ரசீன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.