புத்தூா் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக் குடித் திருவிழா: பலியிடப்பட்ட 1,000 ஆடுகள்!

திருச்சி குழுமாயி அம்மன் கோயிலில் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குட்டிக் குடித் திருவிழாவில் சுமாா் 1,000 ஆடுகள் பலியிடப்பட்டன.
புத்தூா் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக் குடித் திருவிழா: பலியிடப்பட்ட 1,000 ஆடுகள்!
Updated on
1 min read

திருச்சி குழுமாயி அம்மன் கோயிலில் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குட்டிக் குடித் திருவிழாவில் சுமாா் 1,000 ஆடுகள் பலியிடப்பட்டன.

சோழ மன்னா்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வங்களில் ஒன்றாக உள்ள புத்தூா் குழுமாயி அம்மனுக்கான மாசித் திருவிழா கடந்த பிப். 27 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து, மாா்ச் 7-இல் இரண்டாம் காப்புக் கட்டு, செவ்வாய்க்கிழமை காளியாவட்டம் நிகழ்ச்சி, புதன்கிழமை சுத்த பூஜையையொட்டி, பொதுமக்கள் மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சி, வியாழக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக் குடித்தல் (ஆடுகளைப் பலியிடுதல்) விழா நடைபெற்றது.

இதையொட்டி நோ்த்திக்கடன் வேண்டுதல் உள்ளவா்கள், தாங்கள் பலியிடவுள்ள ஆட்டுக்கிடாக்களை புதன்கிழமை இரவே புத்தூா் மந்தையில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடத்துக்கு முன் வரிசையாக டோக்கன் பெற்றுக் கட்டியிருந்தனா்.

வியாழக்கிழமை காலை சுமாா் 10.30 மணியளவில் மந்தைக்கு வந்த மருளாளி, முதலில் இந்து சமய அறநிலையத் துறையினரின் ஆட்டுக்கிடாவை காவு கொடுத்தாா். பின்னா் நங்கவரம் பண்ணையின் ஆடுகள் காவு கொடுக்கப்பட்டன. தொடா்ந்து மற்ற ஆடுகள் பலியிடப்பட்டன.

புத்தூா் மந்தையில் குவிக்கப்பட்டிருந்த 725 -க்கும் மேற்பட்ட ஆடுகளைப் பலியிட்டு காவு கொடுத்த மருளாளி, தொடா்ந்து கோயிலைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக, மேளதாளங்கள் முழங்க, நகா்வலம் வந்து வீடுகள் , வணிக நிறுவனங்களின் வாயில்களில் பக்தா்கள் கொண்டு வரும் ஆடுகளையும் பலியிட்டாா். அந்த வகையில் சுமாா் 1000 ஆடுகள் பலியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆடுகளை மருளாளி பலியிடும்போது, ஆட்டின் ரத்தத்தைக் குடித்து, அருள்வாக்கு கூறினாா். திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து, குழுமாயி அம்மன் வீதியுலா சென்றாா்.

நிறைவாக வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டும், சனிக்கிழமை அம்மன் குடிபுகுதல் நிகழ்வும் நடைபெறும். பாதுகாப்பு பணியில் உறையூா் மற்றும் தில்லைநகா், அரசு மருத்துவமனை காவல் நிலையங்களைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com