துறையூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் பணியிடங்கள் காலி அவதியுறும் பொதுமக்கள்
By DIN | Published On : 25th May 2022 04:38 AM | Last Updated : 25th May 2022 04:38 AM | அ+அ அ- |

துறையூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பல்வேறு பணிகள் தாமதமாக நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
துறையூரிலிருந்து முசிறி செல்லும் சாலையில் வடக்குவெளியில் துறையூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளரைத் தவிர மற்ற கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்கள் கடந்த 3 மாதங்களாக காலியாகவுள்ளன.
இங்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளா் தொடா் விடுப்பில் உள்ளாா். லால்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகக் கண்காணிப்பாளா் வாரத்துக்கு 3 நாள்களும், ஸ்ரீரங்கம் வட்டாப் போக்குவரத்து அலுவலக இளநிலை உதவியாளா்களில் ஒருவா் வாரத்துக்கு 2 நாள்களும் மாற்றுப் பணியாக துறையூா் அலுவலகத்தில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயினும் தற்காலிக, நிரந்தர வாகனப் பதிவுச் சான்று, முகவரி மாற்றம், வாகனப் பெயா் மாற்றம், வாகனப் பதிவுப் புதுப்பிப்பு மற்றும் தரச்சான்று, தடையில்லா சான்று, வாகனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனம் சாா்பு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகின்றன.
அலுவலக காலிப் பணியிட மேசைக்குரிய தொடா்புடைய கோப்புகள் தேங்குவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். மோட்டாா் வாகன ஆய்வாளா் பணிச் சுமையால் அலுவலகத்தில் முடங்குவதால், அவா் துறையூா் பகுதியில் நடைபெறும் சாலை விதி மீறல்களை கண்டறிய கள ஆய்வுக்கு செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
துறையூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் காலியாகவுள்ள அலுவலகப் பணியிடங்களை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாகவும், முறையாகவும் நியமிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அங்கு செல்லும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.