டெல்டா செல்கிறார் முதல்வர்: திருச்சி செல்வேந்திரனிடம் நலம் விசாரிப்பு

திருச்சி செல்வேந்திரனின் இல்லத்துக்கு சென்ற முதல்வர், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
திருச்சி செல்வேந்திரனிடம் நலம் விசாரிக்கும் முதல்வர்.
திருச்சி செல்வேந்திரனிடம் நலம் விசாரிக்கும் முதல்வர்.

காவிரி டெல்டா பாசனப் பகுதிக்குச் செல்லும் வழியில் திருச்சியில் திமுக வெளியீட்டுச் செயலர் திருச்சி  செல்வேந்திரனின் இல்லத்துக்குச் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட, முதல்வர் இரு நாள் சுற்றுப்பயணமாக விமானத்தில் திங்கள்கிழமை பகல் 11.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். 

அவருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்டோர் வந்தனர். பின்னர், திருச்சி உறையூர், குழுமணி சாலையிலுள்ள திமுக வெளியீட்டுச் செயலர் திருச்சி செல்வேந்திரன் இல்லத்துக்கு சென்றார். முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ள அவரிடம் உடல் நலம் குறித்து முதல்வர் விசாரித்தார். முதல்வருடன், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

பின்னர் சுற்றுலா மாளிகை திரும்பிய முதல்வர் வழியில், திருச்சி மாநகராட்சியை பார்த்ததும் அங்கு செல்லுமாறு கூறினார். திருச்சி மாநகராட்சியில் சற்று முன்னர்தான் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேயர் இருக்கையில் அமர்ந்த முதல்வர் மாநகராட்சி அலுவலர்களிடம் சிறிது நேரம் நிலவரங்களை கேட்டறிந்து பின்னர் சுற்றுலா மாளிகை புறப்பட்டார்.  நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தவுடன் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் முதல்வர் வருகைக்காக விமான நிலையம் சென்றனர். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே முதல்வர் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு வருகை தந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

மீண்டும் சுற்றுலா மாளிகை வந்த முதல்வர், மதிய உணவுக்குப் பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் சாலைவழி வேளாங்கண்ணி புறப்படுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com