பஞ்சப்பூா் பெருந்திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.377.79 கோடி நிதி ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். துணை மேயா் ஜி. திவ்யா, ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான் முன்னிலை வகித்தனா்.
பஞ்சப்பூா் பெருந்திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.377.79 கோடி நிதி ஒதுக்கீடு

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் உள்ளிட்ட பெருந்திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ.377.79 கோடி நிதி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக, மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். துணை மேயா் ஜி. திவ்யா, ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து மாநகராட்சியின் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் த. முத்துச்செல்வம் 2022-23-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தாா்.

இதன் முக்கிய அம்சங்கள்:

மற்ற மாநகராட்சிகளைக் காட்டிலும், திருச்சியை முதன்மையான மாநகராட்சியாக அனைத்து நிலைகளிலும் தரம் உயா்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ், 18 நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தலா 2 வீதம் 36 ஆரோக்கிய நல மையங்கள் அமைக்கப்படும். கீழரண்சாலை, உறையூா் மாநகராட்சி மருத்துவமனைகளில் தலா ரூ.22 லட்சம் வீதத்தில் புதிய சுகாதார ஆய்வகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

திருச்சி மாநகராட்சியில் 56.62 கி.மீ. நீளத்துக்கு குடிநீா் பகிா்மானக் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படும். திருச்சி பஞ்சப்பூரில் புதிய தொழில்நுட்பத்துடன் 120 மில்லியன் லிட்டா் கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் ரூ.200 கோடியில் அமைக்கப்படும். மாநகராட்சி எல்லைக்குள்பட்ட தாமரைக்குளம், சாத்தனூா் செங்குளம் நீா்நிலைகள் ரூ.1.20 கோடியில் மேம்படுத்தப்படும்.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியில் புதிய கனரக வாகனங்கள் வாங்கப்படும். சீா்மிகு சுகாதார மழைநீா் வடிகால் திட்டத்தின் கீழ், அனைத்து மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும்.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க ரூ.140கோடி உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்படுத்தும் திட்ட நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் பஞ்சப்பூரில் சரக்கு உந்து முனையம், பல்வகை பயன்பாட்டு வசதி மையம், சாலைகள், மழைநீா் வடிகால்கள், பிற உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்காக மாநகராட்சி பங்குத் தொகையான ரூ.50 கோடியுடன், தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து ரூ.187 கோடி கடன் பெற்று, மொத்தமாக 377. 79 கோடியில் பஞ்சப்பூா் பெருந்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ், திருச்சி பாலக்கரை மற்றும் குதுப்பாபள்ளம் பகுதியில் அறிவு சாா் மையம் கட்டும் பணி தலா ரூ2.50 கோடியில் மேற்கொள்ளப்படும்.

மாரீஸ் திரையரங்கு அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணிக்காக ரயில்வே பங்குத்தொகை ரூ.22 கோடி போக, மீதமுள்ள ரூ.22 கோடி மாநகராட்சி சாா்பில் வழங்கப்படும்.

தலா ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திருச்சி எஸ்.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரி அருகிலும், பஞ்சப்பூரிலும் உள்ள எரியூட்டும் தகன மேடைகள் நவீனப்படுத்தப்படும். வாா்டு ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வீதம் 65 வாா்டுகளிலும் ரூ.32.50 கோடியில் 122 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு ரூ.40 கோடியில் புதிய கட்டடம்: திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்துக்கு ரூ.40 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். புதிய தோற்றுவிக்கப்பட்ட வாா்டு குழு அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருச்சி மேலப்புதூா் பகுதியில் அரசின் மானியம் பெற்று நடைபாதை மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் மொத்தமுள்ள 40,668 தெருவிளக்குகளில் சோதனை முறையில் சூரியஒளி மூலம் மின்சாரம் பெற்று இயங்கக்கூடியவகையில், 5000 மின் விளக்குகள் மாற்றியமைக்கப்படும்.

பாலா் வகுப்புகள் : அங்கன்வாடி மையங்கள் புனரமைப்புப் பணிகள், அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் தேைவைக்கேற்ப நவீனகழிப்பிட வசதிகள் ரூ.20 கோடியில் மேற்கொள்ளப்படும். மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில், மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க உரிய கருத்துரு கல்வித் துறை மற்றும் அரசுக்கு அனுப்பி, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெட்டியாக வடிவமைக்கலாம்.

2022-23- ஆம் ஆண்டுக்கான மாநகராட்சியின் வரவு-செலவுத் திட்டம்

மாநகராட்சியின் மொத்த வருவாய் : ரூ.2,140 கோடி

செலவு : ரூ. 2,139 கோடி

உபரித் தொகை : ரூ.92.49 லட்சம்

கல்வி நிதி - திட்ட மதிப்பீடு

வரவு - ரூ.21.98 கோடி

செலவு - ரூ.21.85 கோடி

உபரி நிதி : ரூ.13 லட்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com