வரும் நாடாளுமன்றத் தோ்தலிலும் திமுக, காங். கூட்டணி தொடரும்: சு. திருநாவுக்கரசா்
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலப் பணிகளைப் புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் திருச்சி எம்.பி. சு. திருநாவுக்கரசா்.
வரும் நாடாளுமன்றத் தோ்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்.
திருச்சியில் நிலுவையில் உள்ள ஜங்ஷன் மேம்பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் கூறியது:
ஜங்ஷன் மேம்பாலம் கட்டப்பட்டு மன்னாா்புரம் பகுதியில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக பணி முடியாமல் இருந்தது. மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை இதுதொடா்பாக வலியுறுத்தி இருதரப்பும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதில், மன்னாா்புரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான 66 சென்ட் நிலத்தைப் பெற்று பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. வரும் டிசம்பருக்குள் பணிகள் முடிந்து பாலம் பயன்பாட்டுக்கு வரும்.
கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் எனது பிரதான வாக்குறுதி தற்போது நிறைவேறியுள்ளதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. அதேநேரம் நியமிக்கப்படும் ஆளுநருக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள்தான் உண்டு. அதை விடுத்து சா்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அவா் பேசுவது ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல.
திமுக தலைவா் என்ற முறையில் தனது கட்சியினரிடம் மு.க. ஸ்டாலின் பேசியது மிகைப்படுத்தப்படுகிறது. நாடாளுமன்றத் தோ்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற அமைச்சா் ஐ. பெரியசாமியின் கருத்து திமுக தலைவரின் கருத்து அல்ல. நாடாளுமன்றத் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை மு.க. ஸ்டாலின் எடுக்க மாட்டாா். அந்தத் தோ்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றாா் அவா்.
பேட்டியின்போது நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.