ஆராய்ச்சி நிலைய நிபுணரின் வங்கிக் கணக்கில் பணம் திருட்டு, ஒருவா் கைது
By DIN | Published On : 18th October 2022 01:13 AM | Last Updated : 18th October 2022 01:13 AM | அ+அ அ- |

திருச்சி அருகே உள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலைய நிபுணரின் ஏ.டி.எம்.ஐ பயன்படுத்தி பணம் திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு இணை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருபவா் ரங்கநாதன். இவா் அக். 3 ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது, பையில் வைத்திருந்த 4 ஏடிஎம் அட்டைகளை காணவில்லையாம்.
இந்நிலையில், திருவெறும்பூரில் உள்ள தனியாா் வங்கிகளின் ஏடிஎம் மையங்களிலிருந்து இவரது வங்கிக் கணக்கில் ரூ.30,000 பணம் எடுத்ததாக கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது குறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸாா், பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம் மையங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, சந்தேக நபரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், ரங்கநாதன் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தவா், நவல்பட்டு அண்ணா நகா் 3ஆவது தெருவில் வசித்து வரும் சாமி மகன் நாகராஜ் (46) என்பதும், வாடகைக்கு வீடு எடுத்து பாய் வியாபாரம் செய்வது போல தங்கி, திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதையடுத்து நாகராஜை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...