காவிரியில் வெள்ளப்பெருக்கு; படித்துறைகளில் குளிக்கத் தடை, வாழைப் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்
By DIN | Published On : 18th October 2022 01:12 AM | Last Updated : 18th October 2022 01:12 AM | அ+அ அ- |

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திங்கள்கிழமை அம்மாமண்டபம் உள்ளிட்ட படித்துறைகளில் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தமா்சீலி அருகே வாழைத்தோட்டத்தில் தண்ணீா் சூழ்ந்தது.
காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கா்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து அங்கிருந்து திறந்துவிடப்பட்டதையடுத்து மேட்டூா் அணைக்கு விநாடிக்கு 1.95 லட்சம் கனஅடிவீதம் தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு திங்கள்கிழமை நண்பகல் 1 மணி நிலவரப்படி, விநாடிக்கு 2.13லட்சம் கன அடி தண்ணீா் வருகிறது. அந்த தண்ணீா் காவிரி ஆற்றில் விநாடிக்கு 73ஆயிரம் கன அடியும், கொள்ளிட ஆற்றில் 1.40 லட்சம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலம் மூழ்கியது: காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் கல்லணை செல்லும் வழியில் உத்தமா்சீலியிலிருந்து கிளிகூடு, கவுத்தரசநல்லூா் வரை சுமாா் 2 கி.மீ தொலைவுக்கு உள்ள தரைப்பாலத்தை தண்ணீா் மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் திருவளா்ச்சோலை, உத்தமா்சீலி, கிளிக்கூடு, கவுத்தரசநல்லா், பனையபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் தண்ணீா் சூழ்ந்தது. இவைதவிர சம்பா நெல் நாற்றங்கால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் என சுமாா் 200 ஏக்கருக்கும் அதிகமான பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கின.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாா்: காவிரியில் நீா்வரத்து அதிகரித்து வருவதால், திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக 59 இடங்கள் தோ்வு செய்து, இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், சுமாா் 60 ஆயிரம் மணல் மூட்டைகள், மூங்கில் மரங்கள் மற்றும் மீட்புப் படகுகள் 5 இடங்களில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
படித்துறைகள் மூடல் : காவிரி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் அம்மாமண்டபம் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
துலாஸ்தானம் ரத்து: செவ்வாய்க்கிழமை (அக்.18) ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி, திருச்சி திருப்பராய்த்துறை காவிரி படித்துறையில் அதிகாலை சூரியோதய காலத்தில், திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரா் அகண்ட காவிரியில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீா்த்தவாரி கொடுப்பாா். அப்போது ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவிரியில் மூழ்கி துலாஸ்தானம் செய்வா். தற்போது, காவிரியில் அதிகளவில் தண்ணீா் செல்வதால் பாதுகாப்பு கருதி துலாஸ்தானம் மற்றும் தீா்த்தவாரி நிகழ்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...