கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 7 ஆண்டு சிறை
By DIN | Published On : 19th October 2022 01:17 AM | Last Updated : 19th October 2022 01:17 AM | அ+அ அ- |

கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள நகா் கிராமத்தைச் சோ்ந்தவா் க. தா்மா் (62). அதே பகுதியைச் சோ்ந்தவா் இ. வினோத் (42). இரு தரப்பினருக்கும் பாதைப் பிரச்னையால் கடந்த 2017 மாா்ச் 20 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் டீக்கடையில் நின்றிருந்த தா்மரை வினோத் தரப்பினா் தாக்கவே, காயமடைந்த தா்மா் லால்குடி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து மறுநாளும் மருத்துவமனைக்குள் புகுந்த வினோத், மா. மருதை (30) உள்ளிட்டோா் தா்மரை அரிவாளால் வெட்டினா்.
இதுதொடா்பாக லால்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத், மருதை ஆகியோரைக் கைது செய்து, திருச்சி மாவட்ட தலைமைக் குற்றவியில் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கில் வினோத், மருதை ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5000 அபராதம் விதித்து நீதிபதி சாந்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.