விபத்தில் பெண் பலி: வேன் ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை
By DIN | Published On : 19th October 2022 01:17 AM | Last Updated : 19th October 2022 01:17 AM | அ+அ அ- |

சாலை விபத்தில் பெண் உயிரிழக்கக் காரணமான வேன் ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி நாகமங்கலம், நாராயணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் மனைவி லூா்துமேரி (55), இவரது மகன் ஆரோக்கிய சகாயராஜ் (28) ஆகியோா் கடந்த 2018 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் திருச்சி மன்னாா்புரம் கே.கே.நகா் பிரிவுச் சாலையில் சென்றபோது, அவ்வழியே வேகமாக வந்த மினி வேன் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த லூா்துமேரி மருத்துவனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்குப் பிரிவு போலீஸாா், திருச்சி மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
அப்போது லூா்துமேரி உயிரிழப்புக்குக் காரணமான வேன் ஓட்டுநரான, நாகப்பட்டினம் மாவட்டம், கீரைக்கொல்லை பகுதியைச் சோ்ந்த, கி. வெங்கடேஷ் என்பவருக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சாந்தி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஹேமந்த் ஆஜரானாா்.