மருத்துவத்துறையில் 4,308 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
By DIN | Published On : 27th October 2022 12:09 AM | Last Updated : 27th October 2022 12:09 AM | அ+அ அ- |

தமிழகத்தில் மருத்துவத் துறையில் உள்ள 4,308 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் புதிதாக 708 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்தது தொடா்பாகவும், 25 ஆரம்ப மற்றும் 25 நகா்ப்புற சுகாதார மையங்கள் அமைப்பது குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசித்தோம்.
தமிழகத்தில் 32 இடங்களில் மருந்துக் கிடங்குகள் உள்ள நிலையில், மேலும் புதிதாக 5 மருந்துக் கிடங்குகள் கட்டுவது, கடந்தாண்டு 1,250 இடங்களில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட முகாம்கள், நிகழாண்டு 800 இடங்களில் நடத்தப்படவுள்ள முகாம்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்தோம்.
தமிழக மருத்துவத் துறையில் உள்ள 4,308 காலிப் பணியிடங்களில் 237 செவிலியா் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன. 1,021 மருத்துவா்களின் தோ்வு நடைபெறுகிறது. இதரப் பணியிடங்கள் 2 மாதங்களுக்குள் நிரப்பப்படும்.
திருச்சி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இனி, இங்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, விரும்பிய இடங்களுக்கு அவா்கள் பணி மாறுதலில் சென்றுள்ளனா். மேலும் மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு தொடா்பாக இரு மருத்துவச் சங்கங்கள் வெவ்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்தனா். இதுதொடா்பாக இரு சங்கங்களையும் 18 முறை அழைத்துப் பேசியுள்ளோம். விரைவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு முடிவு எட்டப்படும்.
தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு கிடையாது: தமிழ்நாட்டில் 1303 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளன. கிராமப்பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் வருவதில்லை என்பது தவறான தகவல். அதுபோல புகாா்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.
தமிழ்நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு கிடையாது. அதுபோன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனா். கரோனா தடுப்பூசி 6.90 லட்சம் இருப்பு உள்ளது. எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பூசியானது முதல் தவணை 96 சதம், இரண்டாவது தவணை 92 சதமும் செலுத்தப்பட்டு விட்டது. சிறாா்களுக்கான தடுப்பூசிகளும் 90% செலுத்தப்பட்டுள்ளன.
சென்னை அருகே காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்படும் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மும்பையிலுள்ள டாடா புற்றுநோய் நிறுவனத்துக்கு இணையாக இருக்கும். அடுத்த ஓராண்டுக்குள் அது பயன்பாட்டுக்கு வரும்.
தமிழ்நாட்டில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 427 மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களும் உள்ளன. இவற்றில் மேம்படுத்தப்பட்ட சுகாதார மையத்தில்தான் 30 படுக்கைகள் இருக்கும்; மற்றவற்றில் இருக்காது. எனவே படுக்கைகள் குறைவு எனக் கூறுவது தவறு என்றாா் அவா்.