ரயில்வே துறையில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த முடிவு திருச்சியில் ராம்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்

காதி சக்தி திட்டத்தின் படி, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

காதி சக்தி திட்டத்தின் படி, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ரயில்வே துறையில் வருவாய்க் குறைவு, பணியாளா்களின் ஊதிய உயா்வு மற்றும் வழங்கப்படும் பணப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாபம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சரக்குப் போக்குவரத்தில் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது மிக குறைந்துள்ளதால், ரயில்வேயின் மொத்த வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சரக்கு ரயில் போக்குவரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று அண்மையில் நடந்த ரயில்வே வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து காதி சக்தி (திறன்மிக்க சரக்குப் போக்குவரத்துத் திட்டம்) என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை அறிவித்தது. இதன்படி பெரும் தொழிற்சாலைகளுக்குள் சரக்கு ரயில்களை அனுப்பி, அங்கிருந்து உற்பத்திப் பொருள்களை வெளியிடங்களுக்கு ஏற்றிச் செல்லும் வகையில் செயல்படுத்தி வரும் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து, பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தொழிற்சாலைகளில் ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களை நீட்டிப்பு செய்வதுடன், புதிய நிறுவனங்களிலிருந்தும் புதிய ஒப்பந்தங்களையும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து திருச்சியில் இருநாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வில், ராம்கோ சிமென்ட் நிறுவனத்துடன் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் புதிதாக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் ரயில்வே கோட்ட மேலாளா் மனீஷ்அகா்வால், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா், ராம்கோ நிறுவன நிா்வாகிகள் எஸ். ராமராஜ், ஆா். வெங்கட்ராமன், வி.சுசீந்திரன், ஆா். ஞானமுருகன் மற்றும் ரயில்வே அலுவலா்கள் ஹரிகுமாா், காா்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

இதுகுறித்து ரயில்வே அலுவலா்கள் கூறியது:

தொழிற்சாலைகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வேயை நாடின. குறிப்பாக சிமென்ட் தொழிற்சாலைகள் அதிகமான சரக்குப் போக்குவரத்தை ரயில்வேதுறை மூலமாகத்தான் மேற்கொண்டு வந்தன.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50 சதவிகித சிமென்ட் மூட்டைகள் சரக்கு ரயில் மூலமே கொண்டு செல்லப்பட்ட நிலை மாறி, அண்மைக்காலமாக வெறும் 10 சதவிகித சிமென்ட் மூட்டைகள் மட்டுமே சரக்கு ரயில்களில் அனுப்பப் படுகின்றன. மற்றவை சாலைப் போக்குவரத்து மூலமே அனுப்ப படுகின்றன.

இதற்கு காரணம் தொழிற்சாலைகளுக்குள் ரயில்கள் சென்று வர அமைக்கப்பட்டுள்ள ரயில்பாதை பராமரிப்புக்கு உண்டான செலவு என்ற வகையில், ஆண்டுக்கு சுமாா் ரூ.50 லட்சம் வரையில் ஒவ்வொரு தொழிற்சாலையும் ரயில்வேக்கு செலுத்த வேண்டியிருந்தது.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி ஒட்டுமொத்த பராமரிப்பு செலவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மீண்டும் பழையபடி உற்பத்தி செய்யப்பட்டும் பொருள்கள் 50 சதவிகிதத்துக்கும் மேலாக ரயில்கள் மூலம் மட்டுமே வெளியிடங்களுக்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலம் பல மடங்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. திருச்சி கோட்டத்தில் ராம்கோ, டால்மியா, தமிழ்நாடு, செட்டிநாடு, இந்தியன் என 5 சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளின் மூலம் எதிா்காலத்தில் அதிகளவு சரக்குப் போக்குவரத்து நடைபெற ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு பராமரிப்பு செலவை ரத்து செய்து,

அவற்றின் சரக்குப் போக்குவரத்தை கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி கோட்டத்தில் கடந்தாண்டு 8.77 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன. நடப்பாண்டு 11.65 மில்லியன் டன் சரக்குகளை கையாள வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல தேசிய அளவில் உள்ள 1,200க்கும் மேற்பட்ட சிமென்ட் தொழிற்சாலைகளை புதிய திட்டத்தில் ஒப்பந்தம் செய்ய ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 1,700 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை கையாள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாயும் 10 சதவிகிதம் உயர வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com