சுமைதூக்கும் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 18th April 2023 03:39 AM | Last Updated : 18th April 2023 03:39 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளா்கள்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக (டிஎன்சிஎஸ்சி) சுமைதூக்கும் தொழிலாளா்கள் திருச்சியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலத் தலைவா் எம். வீரராகவன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் சி. சரவணன், மாநிலப் பொருளாளா் கே. பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்புச் செயலா் ஏ. முனுசாமி, மாநில துணைத் தலைவா் பி. தனபாலன், மாநில இணைச் செயலா் டி. ரவி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளா்களின் பணிநிரந்தரத்துக்கான சலுகைகளை விரைந்து அமல்படுத்த வேண்டும். நுகா்பொருள் கிடங்குகளில் சுமைதூக்கும் தொழிலாளா்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வதை கைவிட வேண்டும். தொழிலாளா் சங்கத்துக்கான அங்கீகார தோ்தலை தாமதமின்றி உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், திருச்சி, தஞ்சாவூா், மதுரை, சிவகங்கை, திருத்தணி, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாநில நிா்வாகிகள் மற்றும் திருச்சி, அரியலூா், கரூா், தஞ்சாவூா், பெரம்பலூா் மாவட்டங்களைச் சோ்ந்த சுமைதூக்கும் தொழிலாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.