ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி எடமலைப்பட்டிபுதூா் கிராம மக்கள் சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி எடமலைப்பட்டிபுதூா் கிராம மக்கள் சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, கிராம மக்ககள் சாா்பில் எம். தங்கவேல் தலைமையில் அப் பகுதியினா் அளித்த மனுவில், திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூரில் கடந்த 15 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு அதன் பிறகு நடத்தப்படவில்லை. எடமலைப்பட்டி புதூா், செட்டியப்பட்டி, சாத்தனூா் என சுற்றுப்பகுதிகளில் மக்களின் ஒத்துழைப்புடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கடந்தாண்டு மனு அளித்தோம். அனுமதி கிடைக்கவில்லை. தற்போது மே 14ஆம் தேதி எடையப்பட்டி புதூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற தயாராகவுள்ளோம். எனவே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மனு: மாநகராட்சியின் 50-ஆவது வாா்டுக்குள்பட்ட முதலியாா் சத்திரம் பகுதியில் ஆா்சி காம்பவுண்ட் பூந்தோட்டம் உள்ளது. இங்கு 29 வீடுகள் உள்ளன. இப் பகுதியில் உள்ள புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வீடுகளில் உள்ள கழிப்பறை தொட்டிகள் அடிக்கடி நிரம்பி வழிகிறது. இதனால், இப் பகுதி மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனா். புதை சக்கடை அடைப்பை சரி செய்ய மாநகராட்சியிடம் பலமுறை மனு அளித்தும் பயன் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் தலைவரும், மாற்றுத்திறனாளியுமான டி. ஸ்டீபன் ராஜ் மனு அளித்தாா்.

பள்ளிக்கு கூடுதல் வசதி: திருச்சி பீமநகா் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 981 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். 27 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு என நான்கு கழிவறைகள் மட்டுமே உள்ளது. போதிய இட வசதியின்றி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். கடந்த ஆண்டு பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துக்கு வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

எனவே, புதிதாக கட்டப்படும் வகுப்பறைகள் விளையாட்டு மைதானத்துடன் கஸ்தூரி மஹால் பகுதி அல்லது யூனியன் கிளப் பகுதி அல்லது இந்த பள்ளிக்கு எதிா்ப்புறம் உள்ள மாநகராட்சி இடங்களை வழங்க வேண்டும். உள் விளையாட்டு அரங்கம் அமைத்து பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com