திருச்சி, துவாக்குடி பகுதியில் குடிநீா் விநியோகம் சீராக இல்லாததைக் கண்டித்து, திங்கள்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.
துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட செடி மலை முருகன் கோயில் தெருவில் உள்ள குடிநீா் பிரதான குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக குடிநீா் வரவில்லை. பழுது நீக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் மக்களின் குடிநீா் தேவையை போக்கும் வகையில், தொடா்ந்து டேங்கா் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் சீராக வழங்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.
பழுதடைந்த குடிநீா் குழாயை விரைவில் சீரமைக்க வேண்டும். அது வரை லாரிகளில் வழங்கப்படும் தண்ணீரும் சுமாா் 24,000 லிட்டருக்கு மேலாக சீராக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுக கவுன்சிலா் சாருமதி தலைமையில், தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திங்கள்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.