கல்மந்தை காலனி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

குடிசை மாற்று வாரிய வீடுகளை கல்மந்தை காலனி மக்களுக்கு ஒதுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி பாலக்கரையில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கல்மந்தை காலனி மக்கள்.
திருச்சி பாலக்கரையில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கல்மந்தை காலனி மக்கள்.

குடிசை மாற்று வாரிய வீடுகளை கல்மந்தை காலனி மக்களுக்கு ஒதுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி தாராநல்லூா் அருகே உள்ள கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில், 192 வீடுகள் கூலி தொழிலாளா்களின் குடும்பத்தை சோ்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் இருந்த வீடுகளில் 64 மாடி வீடுகள் மற்றும் 75 வீடுகளும் தற்போது பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கான வீடு ஒதுக்குவதற்கான தோ்வு திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது தங்களுக்கும் வீடுகள் ஒதுக்கக் கோரி கல்மந்தை காலனி மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பாலக்கரையில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை கல்மந்தை காலனி மக்கள் முற்றகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது,

கல்மந்தை காலனி பகுதியில் 3 தலைமுறைகளாக வீடுகள் கட்டி குடியிருந்த மக்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் இடத்தை காலி செய்து கொடுத்தோம். ஆனால், கல்மந்தை காலனி மக்களுக்கு முழுமையாக வீடுகளை ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, காலனி மக்களுக்கு அனைவருக்கும் வீடுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கல்மந்தை காலனி பகுதி மக்களும் இணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கிளை செயலாளா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் ஆா்.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ரங்கராஜன், மலைக்கோட்டை பகுதி செயலாளா் பா.லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், திருச்சி கிழக்கு வட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காண்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றனா் அப்பகுதி மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com