

இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) சாா்பில், ‘போ்ப்ரோ -2023’ என்ற பெயரிலான வீடுகளின் கண்காட்சி திருச்சியில் ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து கிரடாய் அமைப்பின் முதன்மை தலைவா் வி. கோபிநாதன், தலைவா் ஆா்.எஸ். ரவி, போ்ப்ரோ தலைவா் மோகன் சீனிவாசன் ஆகியோா் திருச்சியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
திருச்சியில் 8ஆவது ஆண்டாக நடத்தப்படும் போ்ப்ரோ -2023 என்ற பெயரிலான வீடுகளின் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் வரும் 4, 5, 6 ஆகிய 3 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இதில் 24 கட்டுமான நிறுவனங்கள், 6 வங்கிகள், 8 வீடுகளுக்கான உள்அலங்கார நிறுவனங்கள் உள்ளிட்டவை 50 அரங்கங்களை அமைத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளன.
இக்கண்காட்சியில் வீடு வாங்குவோருக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதுடன், குறைந்தபட்சம் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையிலான வீடுகள் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் உள்ளன. தனி வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளை பாா்வையிடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், வங்கிகளில் ஒரே நாளில் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா் தொடங்கி வைக்கின்றனா். கண்காட்சியைப் பாா்வையிட அனுமதி இலவசம். குறைந்த விலையில் நம்பிக்கையான வீடுகள் வாங்க இக்கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனா்.
இந்தச் சந்திப்பின்போது, கிரடாய் அமைப்பின் பொருளாளா் முகமது இப்ராஹிம், ஆலோசகா் ஷாஜகான், போ்ப்ரோ செயலாளா் நஸ்ருதீன், கிரடாய் செயலாளா் மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.