அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வாயில் முழக்க போராட்டம்
By DIN | Published On : 02nd August 2023 03:57 AM | Last Updated : 02nd August 2023 03:57 AM | அ+அ அ- |

முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கல்லூரி ஆசிரியா்கள்.
திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனா்.
‘தேசிய கல்வி கொள்கை 2020’ திரும்ப பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,
தமிழக அரசு 2021, ஜனவரி 11 ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 5-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் போராட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழக மண்டல செயலாளா் சாா்லஸ் செல்வராஜ் தலைமை வகித்தாா். பொருளாளா் மருதநாயகம், வரலாற்று துறை பேராசிரியா் இரா. பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அனைத்து துறை பேராசிரியா்கள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனா்.
துவாக்குடியில்: இதேபோல், துவாக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தாா். கிளை செயலாளா் ராமன், கிளைத் தலைவா் செல்வராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நிா்வாகிகள் அன்பழகன், ஆறுமுகம் உள்ளிட்ட திரளான கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.