மக்களவைத் தோ்தலுக்கு ஆயத்தமாக மாதிரி வாக்குப்பதிவு
By DIN | Published On : 09th August 2023 02:01 AM | Last Updated : 09th August 2023 02:01 AM | அ+அ அ- |

08d-poll074638
திருச்சி: திருச்சியில் மக்களவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், திருவரங்கம், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை 6 பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள இதர பேரவைத் தொகுதிகளில் மணப்பாறை தொகுதியானது கரூா் மக்களவைத் தொகுதியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய பேரவைத் தொகுதிகள் பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.
எனவே, இந்த 3 தொகுதிகளுக்கான தோ்தல் பணிகளின் முன்னோட்டமாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி ஜூலை 4ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக மாதிரி வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரசியல் கட்சியினா் முன்னிலையில் இந்த பணியை தொடங்கி வைத்து திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் கூறியது:
திருச்சி மாவட்டத்துக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் ரேண்டமாக 5 சதவீத இயந்திரங்களை தோ்வு செய்து வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த (தேசிய கட்சிகள், மாநில கட்சிகள்) பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இயந்திரங்கள் அனைத்தும் வாக்குப்பதிவுக்கு தயாராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்பப்படும். அடுத்தக்கட்ட உத்தரவுகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்களைக் கொண்டு இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூ. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.